342. காயும் நெஞ்சினேன் பேயினை யனையேன்
கடிகொள் கோதையர் கண்வலைப் பட்டேன்
பாயும் வெம்புலி நிகர்த்தவெஞ் சினத்தேன்
பாவியே னெந்தப் பரிசுகொண் டடைவேன்
தாயும் தந்தையும் சாமியும் எனது
சார்பு மாகிய தணிகையங் குகனே
ஆயும் கொன்றைசெஞ் சடைக்கணிந் தாடும்
ஐயர் தந்தரு ளானந்தப் பேறே.
உரை: உலகுயிர்கட்குத் தாயும் தந்தையும் தலைவனும் ஆதரவுமாகிய தணிகையில் எழுந்தருளும் குகனே, ஆய்ந்த கொன்றை மாலையைச் சிவந்த சடையில் அணிந்து கொண்டு திருநடம் புரியும் தலைவராகிய சிவபிரான் பெற்ற இன்பப் புதல்வனே, வெறுப்புப் பொருந்திய நெஞ்சமும், பேய்த் தன்மையும், மணங்கமழும் பூச் சூடிக்கொள்ளும் பொது மகளிர் கட்பார்வையிற் சிக்கி மயங்கும் செயலும் உடையவனாயும், பிற விலங்குகளின் மேல் பாய்ந்து கொல்லும் வெவ்விய புலி போன்ற சினமுடையவனாயும், பாவம் பல செய்தவனாதலால், எந்த நலம் கொண்டு நின் திருவடியை வந்தடைவேன்; ஒன்றும் தெரிகிலேன்! எ. று.
சாமி - தலைவன்; “மூதூர் தன்னையும் சவட்டிப் போகிச் சாமியைச் சார்தும்” (சீவக. 1734) எனச் சான்றோர் வழங்குவது காண்க. ஆதரவு செய்பவரே சார்பாகுவ ராதலால், முருகப் பெருமானைச் “சார்பு” என்கின்றார். குகன் - குகையில் இருப்பவன்; இங்குக் குகன் என்பது அன்பர்களின் தூய மனமாகிய குகையில் வீற்றிருப்பவன் என்ற பொருளில் முருகக் கடவுளுக்குப் பெயராயிற்று. பூத்தவற்றுள் நல்லன ஆய்ந்து கொள்ளப்பட்ட கொன்றைப் பூக்களே மாலையாகத் தொடுத்துச் சடை முடியில் சிவன் அணிந்து கொள்வதுபற்றி, “ஆயும் கொன்றை செஞ்சடைக்கு அணிந்தாடும் ஐயர்” என்று கூறுகின்றார். அம்பலத்தில் ஆடுபவனாதலால், “ஆடும் ஐயர்” என்று சிறப்பிக்கின்றார். புதல்வனாகிய முருகன் ஞானவின்பத் திருவுருவாக இருத்தலும் உண்மை ஞானத்தைப் பிறருக்கு விளங்க உரைத்தலும் வல்லனாய் எல்லார்க்கும் இன்பம் பெறுவிக்கும் இயல்பினனாதலை விளக்குதற்கு, “ஐயர் தந்தருள் ஆனந்தப் பேறே” என்று புகழ்கின்றார். நெஞ்சில் வெறுப்பு உண்டாகுமாயின், பிறரைக் காய்ந்து கடியும் செயல் உண்டாதலால், “காயும் நெஞ்சினேன்” எனவும், ஆசை மேலிட்டு எங்கும் அலைந்து திரியும் தன்மை தோன்றப் “பேயினை அனையேன்” எனவும், பெண்ணாசையால் பொதுமகளிரிடத்து ஆசை மிக்குத் திரிவது விளங்கக் “கடி கொள் கோதையர் கண்வலைப் பட்டேன்” எனவும் உரைகின்றார். காய்தல் - வெறுத்தல். கடிகொள் கோதையர் - மணம் கமழும் பூமாலைகளை அணிந்து கொள்ளும் மங்கையர். கடி - மணம். பிறர் தம்மைக் காணுமாறு நறிய பூமாலைகளால் தம்மை ஒப்பனை செய்து கொள்வதும் தமது கட்பார்வையால் காண்பர் மனத்தில் காம நோயை உறுவித்தலுமுடைய பொதுமகளிரைக் குறிக்கின்றார்.
இவ்வாறு காம மகளிர் கண்வலையில் எளிதிற்படும் காமுகர் பெருங் கோபிகளாதலால் அதனை யுணர்த்தப் “பாயும் வெம்புலி நிகர்த்த வெஞ்சினத்தேன்” எனவும், காமவெகுளிகள் பாவச் செயல்களைத் தயங்காமல் செய்விப்பனவாதலால், “பாவியேன்” எனவும் வெளிப்பட உரைக்கின்றார்.
இதனால் காய்தலும் பேய் போல் அலைதலும் கடிதிற் சினத்தலும் பிறவும் கொண்டு பாவியானமை தெரிவித்தவாறாம். (6)
|