346.

    அழுக்கு நெஞ்சினேன் பொய்யல தறியேன்
        அணங்க னார்மய லாழத்தில் விழுந்தேன்
    பழுக்கு மூடருள் சேர்ந்திடுங் கொடியேன்
        பாவி யேனெந்தப் பரிசுகொண் டடைவேன்
    மழுக்கை யேந்திய மாசிலா மணிக்குள்
        மன்னி யோங்கிய வளரொளிப் பிழம்பே
    வழுக்கி லார்புகழ் தணிகையென் னரசே
        வள்ளலே யென்னை வாழ்விக்கும் பொருளே.

உரை:

     மழுப்படையைக் கையில் ஏந்துகின்ற சிவபெருமானாகிய மாசில்லாத மாணிக்க மணிக்குள் நிலைத்து உயர்ந்த ஒளி பெருகும் பிழம்பாகிய முருகப் பெருமானே, குற்றமில்லாதவர் புகழ்கின்ற தணிகையில் எழுந்தருளும் அருளரசே, வள்ளலே, என்னை நல்வாழ்வு வாழச் செய்யும் மெய்ப் பொருளே, அழுக்கு நிறைந்த மனத்தை யுடையவனாதலால், பொய்யல்லது மெய்யைச் சொல்லியறியேனாயும், பெண்ணாசையாகிய பெருங்குழியின் ஆழத்தில் வீழ்ந்து வருந்துவேனாயும் பழுத்த மூடர்களைச் சேர்ந்து திரியும் கொடியவனாயு முள்ள பாவியாகிய யான் எந்த நலங்கொண்டு உன் திருவடியை அடைகுவேன்? எ. று.

     மழுப்படையை மழுவாள் என்றலும் உண்டு. “ஒளி மழுவாள் அங்கைக் கூத்தீர்” (ஓத்தூர்) என்று ஞானசம்பந்தர் கூறுவது காண்க. சிவந்த திருமேனியை யுடையவனாதலால் சிவனை, “மணி” என்றும், அம்மேனி மாசு மறுவற்ற தூய்மையின் பிழம்பாக விளங்குதலால், “மாசிலாமணி” என்றும் குறிக்கின்றார். சிவபிரானுடைய நெற்றி விழிக்குள்ளிருந்து வெளிப்பட்டு உலகில் பரவியது பற்றி, “மன்னி ஓங்கிய” எனவும், தோன்றிய போது சோதிப் பிழம்பாய் மேன்மேலும் ஒளி சிறந்து விளங்கினமைபற்றி முருகக் கடவுளை, “வளரொளிப் பிழம்பே” எனவும் சிறப்பிக்கின்றார். “அருவமு முருவுமாகி அனாதியாய்ப் பலவா யொன்றாய்ப் பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாகக், கருணைகூர் முகங்களாறுங் கரங்கள் பன்னிரண்டுங் கொண்டே, ஒரு திரு முருகன் வந்தாங் குதித்தவன் உலக முய்ய” (கந்த. பு) என்று கச்சியப்ப சிவாசாரியர் கூறுவர். கச்சியப்ப முனிவர், “ஓங்கொளியாய் விசும்பாதி தொறுமியலுந் தனதியல்பை யுருவின் மாட்டும், பாங்குபெறத் தெரித்தது போற் பலபொறியாப் பரமர்விழி பயந்தஞான்று, தேங்கொளியாய் வெளியடர்ந்து வளிதொடர்ந்தொள் ளொளிபடர்ந்து தெளிநீர்ப் புக்கு, நீங்கிவிளை யாட்டயர்ந்து தணிகையமர் பெருவாழ்வை நினைந்து வாழ்வாம்” என்று உரைப்பதும் இங்கே நோக்கத் தக்கதாகும். வழுக்குதல் - நன்னெறியினின்றும் பிறழ்தல். வழுக்கிலார் - அறிவு ஒழுக்கங்களில் தவறாதவர்கள். உலகியல் வாழ்வில் மயங்குமிடத்து நல்லறிவாளரை நெறிப்படுத்து அருள் வாழ்வு பெறச் செய்யும் செம்பொருளாதலால், முருகனை, “என்னை வாழ்விக்கும் பொருளே” என்று மொழிகின்றார். “இம்மாயப் பிறப்பென்னும் கடலாம் துன்பத்திடைச் சுழிப்பட்டு இளைப்பேன் இளையா வண்ணம், கைம்மான மனத்துதவிக் கருணை செய்து காதல் அருளவை வைத்தாய்” (ஆணைக்கா) என்று திருநாவுக்கரசர் தெளிய உரைப்பது காண்க. தமக்கு நல்லொழுக்க நன்ஞானம் எய்தாமைக்கு மனத்தின்கண் படிந்திருக்கும் மாசு காரணம் என விளம்பலுற்று, “அழுக்கு நெஞ்சினேன்” என்றும், “பொய்யல தறியேன்” என்றும் கூறுகின்றார். மனத்தூய்மை யின்மையும் வாய்மை யின்மையும் ஒருபாலாகக் காம மயக்கம் ஒருபாற் காரணமாம் என்றற்கு, “அணங்கனார் மயல் ஆழத்தில் வீழ்ந்தேன்” என்கிறார். ஆழத்தில் வீழ்ந்தேன் என்பது தெளிவு பெற இயலாமைக் கேதுவாயிற்று. அணங்கனார், கண்டாரைக் காமவிச்சையில் கலக்கி வருந்தும் இளம் பொது மகளிர் மேற்று. பழுக்கும் மூடர் - முழுக்க முழுக்க மூடத்தன்மை யுடையவர். அவர்கள் தம்மைச் சேர்ந்தாரையும் முழு மூடராக்கும் இயல்பினரென்பது கருத்து. இவர் நெறியில்லாத நெறியில் செலுத்துதலால் யான் நெறி கோடியவனாய்ப் பாவியாயினேன் என்பாராய்க் “கொடியேன் பாவியேன்” என்று உரைத்து, இத்தகைய இயல்புகளைக் கொண்டு நின்னுடைய திருவடியை அடைந்தின்புறுவது எனக்கு ஆகாத தொன்று என்றற்கு, “எந்தப் பரிசு கொண்டடைவேன்” என முறையிடுகின்றார்.

     இதனால், அழுக்கு நெஞ்சமும் வாய்மை யின்மையும் திருவடி யடைய முயல்வார்க்கு ஆகா வென்பது விளங்கியவாறாம்.

     (10)