28. ஆற்றாப் புலம்பல்
அஃதாவது தன்பால் உள்ள குற்றங்கள், அவற்றால் உளவாகும் குற்றச் செயல்கள், அவற்றின் பயனாய் விளையும் நோய்கள் ஆகியவற்றால் ஆற்றாமை யுற்று அழுவது. இப்பகுதிக்கண் வரும் பாட்டுக்கள் ஐந்தும் வள்ளற் பெருமான் எய்திய ஆற்றாமையைப் பாட்டுத்தோறும் இனிது விளக்குகின்றன.
கொச்சகக் கலிப்பா 347. அண்ணாவோ என்அருமை ஐயாவோ பன்னிரண்டு
கண்ணாவோ வேல்பிடித்த மகயாவோ செம்பவள
வண்ணாவோ நற்றணிகை மன்னாவோ என்றென்றே
எண்ணாவோ துன்பத் திருங்கடற்குள் மன்னினனே.
உரை: அண்ணனே, என் அருமை ஐயனே பன்னிரண்டு கண்களை யுடையவனே, வேலை ஏந்தும் கையை யுடையவனே, சிவந்த பவளம் போன்ற மேனியை யுடையவனே, நல்ல தணிகைப் பதியில் எழுந்தருளும் மன்னவனே என்றெல்லாம் நினைந்து வழிபடாமல் துன்பமாகிய பெருங் கடலில் ஆழ்ந்து கிடக்கின்றேன், எ.று.
அண்ணன் - முன்னோன். ஐயன் - தலைவன். பவளம் இயற்கையிலே செம்மை நிறமுடையதாகவும் அதனைச் செம்பவளம் என்றது, கூறப்படும் குற்றம் யாதும் இல்லாத பவளம் என்றற்கு, இதனைக், “கருப்பத் துளையவும் கல்லிடை முடங்கறும் திருக்கு நீங்கிய செங்கொடி வல்லி” (சிலப். 14. 197 - 98) என்பதற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையிற் காண்க. வண்ணம் - நிறம். “தீயான மேனியனே, செம்பவளக் குன்றமே, தீயான சேராமல் செய்வானே” (சிவ. அந் - 98) என்று பரணதேவர் கூறுவது காண்க. எண்ணாவோ, ஓகாரம் அசை. எண்ணா, எதிர்மறை வினையெச்சம் ஈறு கெட்டது. மன்னுதல், ஈண்டு ஆழத்தழுந்துதல் குறித்தது.
இதன்கண், துன்பம் தொடர்ந்து கடலலை போல் அடுக்கி வந்து ஆழ்ந்து கின்றமைக்கு ஆற்றா மாட்டாமை தெரிவித்தவாறு காணலாம். (1)
|