348.

    மன்னப்பார் போற்று மணியேநின் பொன்னருளைத்
    துன்னப்பா ராது சுழன்றேன் அருணைகிரி
    தன்னப்பா நற்றணிகை தன்னில் அமர்ந்தருளும்
    என்னப்பா இன்னுமிந்த ஏழைக் கிரங்காயோ.

உரை:

     அருணகிரி நாதருக்கு அருள் தந்தையாய் விளங்குபவனே, நலமிக்க தணிகைப் பதியில் எழுந்தருளும் என்னுடைய அப்பனே, திருவருளில் நிலைபெறல் வேண்டி உலகத்தவர் துதிக்கும் மாணிக்க மணி போல்பவனே, பொன் போன்ற உனது திருவருளை அடைதற்கு எண்ணாமல் அறிவு அலமருகின்றேனாதலால் இப்பொழுதேனும் ஏழையாகிய என் மீது இரக்கம் கொள்ள மாட்டாயா? எ.று.

     அருணகிரி, திருப்புகழ், சுந்தரலங்காரம், சுந்தரனுபூதி முதலிய நூல்களைப் பாடிய சான்றோர், அவர்க்குச் சிறந்த முறையில் முருகப் பெருமான் அருள் செய்த வரலாறு பற்றி, “அருணகிரி தன் அப்பா” என்றும், தணிகை முருகனுக்கும் தமக்குமுள்ள தொடர்பு காட்ட, “நல்தணிகை தன்னில் அமர்ந்தருளும் என் அப்பா” என்றும் கூறுகின்றார். பார் - மண்ணுலகம். மண்ணுலகத்து நன்மக்கள் முருகனுடைய திருவருள் பெற்று அவனது திருவடி நீழல் வாழ்வில் நிலைபெற்றிருப்பதில் விருப்புடையராக இருக்கும் நலத்தைப் புலப்படுத்தற்குப் “பார் மன்னப் போற்றும் மணியே” என்று பரவுகின்றார். துன்னுதல் - அடைதல்; சேர்தலுமாம். திருவருளைப் பெற நினையாமல் உலகியல் போகப் பொருள்களை நினைந்து அலைந்தமை விளங்க, “நின் பொன்னருளைத் துன்னப் பாராது சுழன்றேன்” என்று சொல்லுகின்றார். பொன்னருள் - பெறற்கரிய அழகிய திருவருள். பாராது சுழன்றேன் என்றவிடத்துப் பார்த்தல், நினைத்தல் குறித்து நின்றது. நின் திருவருளைத் துன்னுவதை எண்ணாமல் பன்னாள் கழிந்தமை தோன்ற “இன்னும்” என்று இயம்புகிறார். பொருட் செல்வம் பெறாதானை ஏழை என்பது போல் அருட் செல்வம் பெறாமை விளங்க “ஏழை” என்றும் சொல்லிப் புலம்புகிறார்.

     இதன்கண் திருவருளைப் பெற நினையாது உலகியல் பொய்ப் பொருளை நாடி வருந்தியதை உரைப்பது காணலாம்.

     (2)