349. காய்நின்ற நெஞ்சக் கடையேன் திருத்தணிகை
வாய்நின் றுனதுபுகழ் வாய்பாடக் கைகுவித்துத்
தூய்நின்றே தாளைத் தொழுதாடித் துன்பம்எலாம்
போய்நின் றடைவேனோ புண்ணியநின் பொன்னருளே.
உரை: யாரையும் வெறுத்தலையுடைய மனமுடைமையால் கடையவனாகிய யான் நினது திருத்தணிகைத் திருக்கோயில் வாயிலில் நின்று உன்னுடைய புகழை வாயாற் பாடிக் கைகளைக் குவித்துப் புதிய மலர்களை உனது திருவடியில் தூவி நின்று தொழுது கூத்தாடி எனக் குற்ற துன்பமெல்லாம் தொலையப் புண்ணிய மூர்த்தியாகிய உன்னுடைய அழகிய திருவருளைப் பெறுவேனோ? எ. று.
காய், முதனிலைத் தொழிற் பெயர். காய்தல் - வெறுத்தல். நெஞ்சம் உடையேனாதலால் கீழாயினேன் என்பார், “நெஞ்சக் கடையேன்” என்று கூறுகின்றார். தணிகைவாய் என்பது தணிகையில் கோயில் வாயில் என்னும் பொருளது. புதுமலர் என்பது அவாய் நிலை. ஆடுதல் - மகிழ்ச்சியால் கூத்தாடுதல். நெஞ்சினால் கீழ் மகனாகியதால் நின் பொன்னருளைப் பெறுவது அரிதாதல் பற்றி, “நின் பொன்னருள் அடைவேனோ” என்று புலம்புகிறார்.
இதன்கண் நெஞ்சின்கண் தூய்மை யில்லாமையால் தணிகை முருகன் திருவருளைப் பெறுவது அரிது என்பது உய்த்துணரப்படுவது காண்க. (3)
|