35.

    பூவே மணமே சரணம் சரணம்
        பொருளே அருளே சரணம் சரணம்
    கோவே குகனே சரணம் சரணம்
        குருவே திருவே சரணம் சரணம்
    தேவே தெளிவே சரணம் சரணம்
        சிவ சண்முகனே சரணம் சரணம்
    காவேர் தருவே சரணம் சரணம்
        கந்தா சரணம் சரணம் சரணம்.

உரை:

     மலராகவும் மணமாகவும் உள்ளவனே, பொருட் செல்வமும் அருட் செல்வமுமானவனே, தலைவனே, குகப் பெருமானே, ஞானாசிரியனே, ஞானச் செல்வமே, தேவனே, தெளிவின் வடிவாயவனே, சிவ சண்முகக் கடவுளே, கற்பகச் சோலைக்கு அழகு தரும் கற்ப தருவே, கந்தசாமிக் கடவுளே, உன் திருவடியே எனக்குப் புகலிடமாம். எ. று.

     அழகும் கவர்ச்சியுமுடைய மலரும் அதனிடத்தெழும் நறுமணமும் இறைவன் வடிவமெனச் சான்றோர் கூறுதலால், முருகக் கடவுளை “பூவே மணமே” எனப் புகல்கின்றார். “பூத்தானாம் பூவின் நிறத்தானுமாம் பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற கோத்தானாம்” (கருகா) என்று திருநாவுக்கரசர் உரைப்பர். எல்லாரிடத்தும் பொதுவாக உளதாகும் பொருட் செல்வம் போல யாவர் மனத்தும் தங்குதலால் “பொருளே” எனவும், உயர்ந்தோர்பால் சிறப்பாக வுளதாகும் அருட்செல்வம் போலச் சிவஞானிகளான உயர்ந்தோர் உள்ளத் தாமரையில் சிறப்புற எழுந்தருளுதலால் “அருளே” எனவும் கூறுகின்றார். “அருட்செல்வம் செல்வத்துட் செல்வம், பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள” எனத் திருவள்ளுவர் உரைப்பது காண்க. உயிர்ப் பொருள் உயிரில் பொருள் என்ற எவ்வகைப் பொருட்கும் தலைவனாய் இயலுதலால் “கோவே” என்றும், மக்கள் மனமாகிய குகையை இடமாக வுடையனாதல் பற்றிக் “குகனே” என்றும் கூறுகின்றார். “வணங்கும் ஆருயிர்க் குகைதொறும் வதிதலால் குகனென்று, இணங்குவான் பெயர்க் கியையுமா றிருப்பது போலாம்” (தணிகை. நாட்டுப்) எனக் கச்சியப்ப முனிவர் கூறுவது அறிக. பிரணவ ஞானப் பொருளை அருளிய பெருமானாதலால் “குருவே” எனவும், ஞானமாகிய பெருஞ் செல்வத்தின் திருவுருவாய் விளங்குவதால் “திருவே” எனவும் கூறுகிறார். தேவசேனாபதி யாதலால் அச்சிறப்பு விளங்கத் “தேவே” எனவும், நெஞ்சம் கலங்கித் தெளிவின்றி மயங்கும் போது தெளிவு நல்கி மகிழ்விக்கும் அருட் செயலை யுடையனாதலால் “தெளிவே” எனவும் இயம்புகிறார். “அமரர் சேனைக்கு நாயகனான குறவர் மங்கை தன் கேள்வன்” (நள்ளாறு) என நம்பியாரூரர் சிறப்பிப்பர். தெளிவு நல்கும் திறத்தை, “தொண்டர் நெஞ்சிருள் கூரும் பொழுது நிலாப் பாரித்து அஞ்சுடராய் நின்றான்” (ஆரூர்) என்பர் நாவுக்கரசர். தெளிவு தருபவனைத் “தெளிவு” என்றது உபசார வழக்கு. அறுமுகப் பிரான் சிவத்தின் வேறல்லன் என்றற்குச் “சிவசண்முகன்” எனக் குறிக்கின்றார். வேண்டுவார் வேண்டுவதே ஈயும் வண்மை பற்றி, “காவேர் தருவே” என்று பரவுகின்றார். கா-இந்திரனாட்டுக் கற்பகச் சோலை.

     இதனால், பூவும் மணமும் பொருளும் அருளும் பிறவுமாகிய கந்தசாமிக் கடவுள் திருவடியே புகலிடம் என்பதாம்.

     (35)