350.

    பொன்பிணிக்கும் நெஞ்சப் புலையேனை இவ்வுலகில்
    வன்பிணிக்கோ பெற்று வளர்த்தாய் அறியேனே
    என்பிணைத்தார் வள்ளற் கினிமை பெறும்மணியே
    அன்பிணைத்தோர் போற்றும் அருட்டணிகை மன்னவனே.

உரை:

     எலும்புகளை ஓரொப்ப இணைத்துக் கட்டிய மாலை யணிந்த வள்ளலாகிய சிவபெருமானை இன்பம் பெறுவிக்கும் மணி போல்பவனே, அன்பு நிறைந்த மனமுடையவர் வணங்கி வழிபடும் அருள் நிலையமாகிய தணிகைப் பதியில் எழுந்தருளும் அரசே, பொன்னாசையால் பிணிப்புண்ட மனமுடைமையால் புலைத்தன்மையுற்ற என்னை இவ்வுலகத்தில் வலிய நோய்க்கு இரையாகும் பொருட்டோ பிறப்பித்து வளர்த்தாய், இதன் கருத்தை யான் அறிகிலேன்? எ. று.

     எலும்பையும் ஆமை யோட்டையும் சேரக் கோத்துத் தொடுத்த மாலையாதலின் அதனை, “என்பு இணைத்தார்” என்றும், அதனை அணிவது காண்பார்க்கு இரக்கமின்மை புலப்படுத்தினும் அதற்கு மாறாத வேண்டுவார் வேண்டுவதை நல்கும் இயல்பு பற்றிச் சிவபிரானை, “வள்ளல்” என்றும், அவரை ஞான முரைத்து இன்பம் உறுவித்த செயலைச் சிறப்பித்து, “இனிமை பெறும் மணியே” என்றும் உரைக்கின்றார். பெறும் மணி - பெறுவிக்கும் மணி. மிக்க அன்புடைய பெருமக்களை, “அன்பிணைத்தோர்” என்று குறிக்கின்றார். பொன்னாசையால் பிணிக்கப்பட்ட நெஞ்சம் கொலை புலை முதலிய தீச்செயல்கட்கு உள்ளாக்குதலால், “பொன் பிணிக்கும் நெஞ்சப் புலையேன்” என்று கூறுகின்றார். பொன் மிகப் பெற்றோர்க்கு ஈட்டலும், காத்தலும், இழத்தலும் பிறவும் துன்பமாய் நோயாய் இரவு பகல் எப்போதும் வருத்த முறுவித்தலால், “இவ்வுலகில் வன்பிணிக்கோ பெற்று வளர்த்தாய்” எனவும், இன்பக் காரணமாகிய பொன் துன்பமாவதன் கருத்து இனிது புலப்படாமையால் “அறியேன்” எனவும் இயம்புகிறார்.

     இதனால் பொன்னாசை, பிணியாய்த் துன்பத்துக்குக் காரணமாவது குறித்தவாறாம்.

     (4)