30. புண்ணிய நீற்று மான்மியம்
அஃதாவது சிவபுண்ணியத்தின் திருவுருவாய்
அமைந்த திருநீற்றின் பெருமையை விளம்புதல். இங்குள்ள
அருட்பாக்கள் பத்திலும் திருநீறிடும் முறையும் அணிபவர்
பெறும் பயனும் விரிவாகக் கூறப்படுகின்றன.
வண்ணக்கலி விருத்தம்
355. திவசங்கள் தொறும்கொண்டிடு தீமைப் பிணிதீரும்
பவசங்கடம் அறுமிவ்விக பரமும் புகழ்பரவும்
கவசங்கள் எனச்சூழ்ந்துறு கண்ணேறது தவிரும்
சிவசண்முக எனவேஅருள் திருநீறணிந் திடிலே.
உரை: திருவருட் பேற்றுக்குரிய திருநீற்றைச் சிவ சண்முகா என்று வாயால் சொல்லி அணிந்து கொண்டால் அணிபவர்க்கு நாள்தோறும் உண்டாகின்ற தீமையும் நோய்களும் நீங்கும்; பிறவித் துன்பங்கள் கெட்டொழியும்; இவ்வுலகம் மேலுலகமாகிய இரண்டிலும் புகழ் பரந்து நிலைபெறும்; கவச மணிந்தது போலத் தம்மைச் சூழ்ந்து கொள்ளும் கண்ணேறுகளும் துன்பம் செய்யா, எ. று.
திவசம் - நாள். நாள்தோறும் நம்முடைய மனம், மொழி, மெய்களால் வினைகள் செய்யப்படுவதால் நன்மையும் தீமையும் நம்மை வந்து பற்றுகின்றன; எனவே, “திவசங்கள் தொறும் கொண்டிடும் தீமைப் பிணி” என்று சொல்லுகிறார். பவ சங்கடம் - பிறவித் துன்பங்கள். அவை தன்னைப் பற்றி வருவனவும், பிற உயிர்களைப் பற்றி வருவனவும், தெய்வத்தைப் பற்றி வருவனவும் என மூவகையால் வரும் துன்பங்கள் என்பர் பரிமேலழகர். இவையும் விருப்பு வெறுப்புக்களால் உண்டாவன என்பர். இகபரம் - இவ்வுலகு மேலுலகு. செய்தாரைப் பற்றாது செய்தார் வாழும் உலகை ஆதாரமாகக் கொள்ளுவது பற்றிப் புகழ் பரவும் என்பதற்குப் புகழ் பரந்து நிலைபெறும் என்று பொருள் கூறப்பட்டது. கண்ணேறு -கட்பார்வையால் தாக்கப்படுதல். சிலருடைய கட்பார்வையால் பார்க்கப் பட்டவர் நோயுறுவராயின் அவரைக் கண்ணேறு பட்டார் என்பது உலகியல் மரபு. பார்க்கப்பட்ட போதே யன்றிச் சமயம் நோக்கித் தாக்குதற் பொருட்டு உடம்பிலணியும் சட்டை போலக் கண்ணேறு சூழ்ந்து கொள்ளும் என்பது பற்றிக் “கவசங்கள் எனச் சூழ்ந்துறு கண்ணேறு” என்று கூறுகின்றார். “கண்ணேறு எலாம் இன்று அறத் துடைப்பாம்” (அரிசமய பதுமை. 140) என்று சடகோபதாசர் பாடுவது காண்க. கண்ணேறு, வேலேறு தேளேறு என்றாற் போல நிற்பது. இது கண்ணூறு எனவும் வழங்குவதுண்டு. “நந்தம் பாவை கொல் என்று அந்தில் நின்று ஆய்ந்து கண்ணூறு அழித்தாள் அணி நீறளித்தே” (தணி. கைபு. களவு - 320) என்பர் கச்சியப்ப முனிவர்.
இதனால், சிவசண்முகா என்று வாயாற் சொல்லித் திருநீறணிந்தால் எய்தும் பயன் கூறியவாறாம். (1)
|