356.

    மாலேந்திய குழலார்தரு மயல்போ மிடர்அயல்போம்
    கோலேந்திய வரசாட்சியும் கூடும் புகழ்நீடும்
    மேலேந்திய வானாடர்கள் மெலியாவிதம் ஒருசெவ்
    வேலேந்திய முருகாவென வெண்ணீறணிந் திடிலே.

உரை:

     மேலுள்ள வானுலகத்துத் தேவர்கள் வருந்தாவாறு ஒரு வேற்படை ஏந்திய முருகா என்று சொல்லி வெண்மையான திருநீற்றை அணிந்து கொண்டால் காம மயக்கத்தை உண்டுபண்ணும் மகளிரால் உண்டாகும் மயக்கமும், துன்பமும் ஒழிந்துபோம்; செங்கோல் பிடித்து அரசாளும் போகமும் வந்தடையும்; புகழ் பெருகும், எ. று.

     மண்ணுலகிற்கு மேலுள்ள விண்ணுலகத்துத் தேவர்களை, “மேலேந்திய வானாடர்கள்” என்று குறிக்கின்றார். தேவர்களைப் பொருது வென்று துன்புறுத்திய சூரவன்மா முதலிய அசுரர்களை அது செய்யாதபடி போர் தொடுத்துத் தன் கை வேற்படையால் வென்றழித்து அத்தேவர்களைக் காத்தருளிய முருகனது வரலாற்றை நினைந்து, “வானாடர்கள் மெலியாவிதம் ஒரு செவ்வேல் ஏந்திய முருகா” என்று கூறுகின்றார். அசுரர்களைக் கொன்ற போது அவர்களின் குருதி தோய்ந்து சிவந்ந வேல் என்பதற்குச் “செவ்வேல்” என்று சிறப்பிக்கின்றார். குழலார் - கூந்தலை யுடைய மகளிர். பார்வையாலும் மேனி வனப்பாலும் பிற ஆடவரை மயக்கும் இயல்பினரான விலை மகளிரை, “மாலேந்திய குழலார்” என்றும், அவர்கள் தொடர்பால் விளையும் காம மயக்கத்தையும், காம நோயையும் மயல் என்றும், இடர் என்றும் உரைக்கின்றார். கோல் - செங்கோல்; அஃது அரசர் செய்யும் நீதி முறைக்கு அடையாளமாவது. அரசாட்சி, அரசரது ஆட்சி புரிவதால் உளதாகும் போகம். புகழ் தோன்றி எங்கும் பரவும் என்பதற்குப் “புகழ் நீடும்” என்று புகல்கின்றார்.

     இதனால், செவ்வேல் ஏந்திய முருகா என்று திருநீறு அணிந்து கொண்டால் வரும் பயன் கூறியவாறாம்.

     (2)