357. தவமுண்மையொ டுறும்வஞ்சகர் தம்சார்வது தவிரும்
நவமண்மிய அடியாரிடம் நல்கும் திறன்மல்கும்
பவனன்புனல் கனல்மண்வெளி பலவாகிய பொருளாம்
சிவசண்முக எனவேஅருள் திருநீறணிந் திடிலே.
உரை: நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம் எனப் பலவாய் விரிந்த பரம்பொருளாகிய சிவசண்முகா என வோதி அருள் நலம் பொருந்திய திருநீறு அணிந்து கொண்டால் தவழும் வாய்மையும் உண்டாகும், வஞ்சகரது தொடர்பு நீங்கி விடும், புதியராய் வந்த அடியவர்க்கு வேண்டுவன உதவும் கூறுபாடு உண்டாகும், எ. று.
மண், புனல், கணல், பவனன், வெளி என நிற்றற் பாலன செய்யுளாதல் பற்றி முறை மாறி இருக்கின்றன. மண் முதலிய ஐந்துமாக விரிந்திருப்பது பரம் பொருளாதலின், “பவனன் புனல் கனல் மண் வெளி பலவாகிய பொருளாம்” என்று விளம்புகின்றார். தவம் - உற்ற நோயைப் பொறுத்தலும் ஏனை உயிர்கட்கு ஊறு செய்யாமையும் ஆகும். உண்மை - வாய்மை. சார்வது என்பதன் ஈற்றிலுள்ள அது என்பது பகுதிப் பொருள் விகுதி. நவம் - புதுமை. முருகன் திருவடிப் பெருமையைப் புதிதுணர்ந்து அடியராயினார். “நவமண்மிய அடியார்” எனப்படுகின்றனர். அவர்கட்கு வேண்டுவது உதவி அந்நெறியில் நிறுத்தப் பண்ணுவது நல்ல செயற் கூறாதலால், “நல்கும் திறன்” எனப்படுகின்றது. அடியார்க்கு எனற்பாலது “அடியாரிடம்” என வந்துள்ளது.
இதனால் பரம்பொருளாம் சிவ சண்முகா என்று சொல்லிக் கொண்டு திருநீறணிந்து கொண்டால் வரும் பயன் கூறியவாறாம். (3)
|