358. துயிலேறிய சோர்வும்கெடும் துயரம்கெடும் நடுவன்
கையிலேறிய பாசம்துணி கண்டே முறித்திடுமால்
குயிலேறிய பொழில்சூழ்திருக் குன்றேறி நடக்கும்
மயிலேறிய மணியேயென வளர்நீறணிந் திடிலே.
உரை: குயில்கள் வாழ்கின்ற சோலைகள் சூழ்ந்த திருத்தணிகைக் குன்றின் மேல் ஏறி நடக்கும் மயில் ஏறும் மணி என்று சொல்லித் திருவளரும் நீறணிந்து கொண்டால் உறக்கத்தை உண்டு பண்ணும் சோர்வு நீங்கும்; மனத் துயரமும் கெடும்; எமன் கையிலுள்ள பாசக் கயிறும் துண்டு துண்டாய் அறுபட்டுப்போம், எ. று.
மாமரச் செறிவுகளிலும், பிற இருள்படத் தழைத்த சோலைகளிலும் குயில்கள் வாழ்வது இயல்பாதலால், “குயில் ஏறிய பொழில்” என்று சிறப்பிக்கின்றார். குன்று என வாளா மொழியாது திருக்குன்று எனச் சிறப்பித்தலால் திருத்தணிகைக் குன்று என்பது கொள்ளப்பட்டது. மரம் செறிந்த குன்றுகளில் வாழும் மயில்கள் தோகையை விரித்தாடுமிடத்து இங்குமங்குமாக நடந்தாடுவது பற்றி, “நடக்கும் மயில்” என்று கூறுகின்றார். இது சாதியடை. மயிலேறும் பெருமானாதலால் முருகனை, “மயிலேறிய மணியே” எனச் சொல்லி நீறணிக என்கின்றார். சோர்வுற்ற காலத்தில் உறக்கம் வருவது இயற்கையாதலால், “துயிலேறிய சோர்வு” என்றும், துன்பமுற்ற பொழுது மனத்தின்கண் துயரம் வந்து பொருந்துவதால், “துயரம்” என்றும் கூறுகின்றார். நடுவன் - எமன். கையில் நுண்ணிய கயிறு கொண்டு உடலில் ஒன்றியிருக்கும் உயிரைப் பிடித்து வேறாக ஈர்த்துச் செல்லும் இயல்புடைய தாகையால் எமன் கைக்கயிற்றை, “எமபாசம்” என்று இயம்புகின்றார். முறித்தல், ஈண்டு அறுத்தல் என்னும் பொருளது. துணி காண்டல் - துண்டுகளாக்குதல்.
இதனால் மயிலேறிய மணியே எனச் சொல்லித் திருநீறு அணிந்து கொண்டால் வரும் பயன் கூறியவாறு. (4)
|