359. தேறாப்பெரு மனமானது தேறுந்துயர் மாறும்
மாறாப்பிணி மாயும்திரு மருவும் கருவொருவும்
வீறாப்பொடு வருசூர்முடி வேறாக்கிட வருமோர்
ஆறாக்கரப் பொருளேயென அருள்நீறணிந் திடிலே.
உரை: பெருமிதத்தோடு எதிர்த்து வந்த சூரவன்மாவின் தலையை அவன் உடலினின்றும் வெட்டி வீழ்த்தும் ஒப்பற்ற ஆறெழுத்துப் பொருளே என்று வாயாற் சொல்லி அருள் நலம் பயக்கும் திருநீற்றை யணிந்து கொண்டால், தெளிவின்றிப் பெருகிய மனமும் தெளிவெய்தும்; மனத் துயரமும் நீங்கும்; நீங்காத நோயும் நீங்கும்; செல்வம் பலவும் உண்டாகும்; பிறவியும் கெடும், எ. று.
வீறாப்பு - வீரத்தால் உளதாகும் பெருமிதம். அண்டங்கள் அத்தனையும் வென்று விட்டோம். இவன் எம்மாத்திரம் என்ற செருக்கு மிகுந்து வந்தானாதலின், “வீறாப்பொடு வருசூர்” என வுரைக்கின்றார். சூர் - சூர் முதல் எனப்படும் சூரவன் மா. சூரர்களோடு போர் செய்து மேம்பட்ட படை வீரர்கள் ஆறெழுத் தென்கிற நமோ குமாராய என்ற மந்திரத்தை ஓதிக் கொண்டே அசுரர்களைக் கொன்றுயர்ந்த குறிப்புணர்த்தச் “சூர்முடி வேறாக்கிட வரும் ஆறாக்கரப் பொருளே” என்று புகழ்கின்றார். ஆறக்கரம், ஆறாக்கர மென நீண்டது. எதுகை நயம் பற்றி, ஓர் ஆறாக்கரப் பொருள் என்பதற்கு ஓர் எழுத்தினின்று ஆறெழுத்தாய் விரிந்த பொருள் என்பது; அதற்காதரவாக, “ஓர் எழுத்தில் ஆறெழுத்தை ஓதுவித்த பெருமானே” என்ற திருப்புகழைக் காட்டுவதும் உண்டு. விரிந்த மனமுடையவராயினும் முக்குண வயத்தால் மயங்கித் தெளிவுறாமை இயல்பாதலின், “தேறாப் பெருமனம்” என்றும், மணி மந்திர மருந்துகளால் தீராத நோய்களும் உண்டாதலால் அவற்றை, “மாறாப் பிணி” என்றும் கூறுகின்றார். கரு என்பது பிறப்பு . ஒருவுதல் - நீங்குதல்.
இதனால், ஆறக்கரப் பொருளே எனச் சொல்லி நீறணிந்தால் எய்தும் பயன் கூறியவாறாம். (5)
|