36. நடவும் தனிமா மயிலோய் சரணம்
நல்லார் புகழும் வல்லோய் சரணம்
திடமும் திருவும் தருவோய் சரணம்
தேவர்க் கரியாய் சரணம் சரணம்
தடவண் புயனே சரணம் சரணம்
தனிமா முதலே சரணம் சரணம்
கடவுண் மணியே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.
உரை: ஆடுகின்ற ஒப்பற்ற பெரிய மயிலை வாகனமாக வுடையவனே, நல்லவர்கள் பாராட்டும் வல்லமை யுடையவனே, தேகத்திற்கு வண்மையும் வாழ்க்கைக்குச் செல்வமும் தருபவனே, தேவர்கள் எய்துதற் கரியவனே, பெரிய வண்மையுடைய தோளை யுடையவனே, ஒப்பற்ற பெரிய முதல்வனே, தெய்வமணியே, கந்தசாமிக் கடவுளே நின் திருவடி எனக்குப் புகலிடமாம். எ. று.
சூரவன்மாவின் கூறாதல் பற்றி, மயிலைத் “தனிமா மயில்” என்று சிறப்பிக்கின்றார். “உணர்வு கொண்டொழுகி நின்ற சூர்திகழ் மஞ்ஞை” (சூரபன்மன் வதை. 499) என்று கச்சியப்ப சிவாசாரியார் குறிப்பது காண்க. அறிவு அருள் செயல்களில் ஒப்பற்ற வலிமை யுடையனாதலால் நல்லோர் புகழ்வது இயல்பாதல் கண்டு, “நல்லோர் புகழும் வல்லோய்” என்று கூறுகிறார். திடம் - மெய்வலி. திரு - செல்வம். மெய்வன்மையும் செல்வமும் இல்லாவிடத்து வாழ்வாங்கு வாழும் வளம் எய்தலாகாமையின் வாழ்வார்க்குத் தேக திடமும் செல்வமும் நல்கும் அருளாளனாதலை நினைந்து “திடமும் திருவும் தருவோய்” என மொழிகின்றார். திடமின்மை நற்குண நற்செயல்கட்கு இழுக்காதலை, “திடமிலி சற்குணமிலி நற்றிறமிலி யற்புதமான செயலிலி” (திருப்புகழ். பழனி) என அருணகிரி நாதர் ஓதுவதால் அறிக. தேவர்களும் மக்கட் பிறப்பில் நல்வினை புரிந்து உயர்ந்தோராதலின், மக்கட் டன்மை முற்ற நீங்காமையால் முருகப் பெருமானை இனிதின் எய்தாமை புலப்படத் “தேவர்க் கரியாய்” என்று ஏத்துகின்றார். தட - பெருமை. வரையா தருளும் வள்ளன்மை யுடையனாதல் பற்றித் “தடவண் புயனே” எனவும், தனி முதற் பரம்பொருளாகிய சிவத்தின் கூறாதல் பற்றி, “தனிமா முதலே” எனவும் சாற்றுகின்றார். கடவுள் மணி-தெய்வமணி: “சண்முகத் தெய்வமணி” என்றாற் போல.
இதனால், மயிலோனும் வல்லோனும் பிறவுமாகிய கந்தசாமிக் கடவுளின் திருவடியே புகலிடம் என்பதாம். (36)
|