361. மேலாகிய உலகத்தவர் மேவித்தொழும் வண்ணம்
மாலாகிய இருள்நீங்கிநல் வாழ்வைப் பெறுவார்காண்
சீலாசிவ லீலாபர தேவா உமையவள்தன்
பாலாகதிர் வேலாயெனப் பதிநீறணிந் திடிலே.
உரை: சீலா, சிவலீலா, பரதேவா, உமையவள் பாலா, கதிர்வேலா என்று சொல்லிச் சிவபிரான் அணியும் திருநீற்றை அணிந்து கொண்டால் மேலுலகத்துத் தேவர்கள் விரும்பி வந்து தொழுது வணங்குமாறு மயக்கமாகிய இருள் நீங்கி இன்ப வாழ்வைப் பெறுவார்கள். எ. று.
சீலா - நல்லொழுக்கமுடையவனே. சிவலீலா - சிவபெருமான் செய்யும் செயல்களைப் புரிபவன். லீலை - செயல்கள். பரதேவன் - தேவர்களுக்கெல்லாம் மேலாய தேவன். பதிப் பொருளாகிய சிவபெருமான் திருமேனியில் கிடந்து ஒளி திகழ்வது பற்றிப் “பதிநீறு” என்று புகழ்கின்றார். மேலாகிய உலகம் - தேவர் உலகம். மேவுதல் - விரும்புதல். மாலாகிய இருள் - மயக்கத்தைச் செய்யும் மலவிருள். நல்வாழ்வு - ஞானவின்பப் பெருவாழ்வு.
இதனால் உமைபாலா, கதிர்வேலா என்பன முதலாகிய திருப்பெயர்களை யோதித் திருநீறணிந்து கொண்டால் வரும் நலம் கூறியவாறாம். (7)
|