362. அகமாறிய நெறிசார்குவர் அறிவாம்உரு அடைவார்
மிகமாறிய பொறியின்வழி மேவாநல மிகுவார்
சகமாறினும் உயர்வானிலை தாமாறினும் அழியார்
முகமாறுடை முதல்வாவென முதிர்நீறணிந் திடிலே.
உரை: ஆறுமுகம் உடைய முதல்வனே என்று சொல்லி, பழமையான திருநீற்றை யணிபவர் பாவத்தின் நீங்கிய அறநெறியிற் செல்வார்; ஞானத் திருவுருவைப் பெறுவார்கள்; பல்வேறு மாறுபட்ட வழிகளில் செலுத்தும் ஐம்பொறிகளின் வழிச் செல்ல விரும்பாத நலம் மிகப் பெறுவர்; மண்ணுலகம் மாறினும் உயர்ந்த வானுலகம் நிலை தடுமாறு மாயினும் நிலைமை குன்ற மாட்டார்கள், எ. று.
முன்னைப் பழம் பொருளாதலால் சிவன் திருமேனியில் கிடக்கும் திருநீறு, “முதிர் நீறு” என மொழியப்படுகிறது. அகமாறிய நெறி - அறநெறி. அகம் - பாவம். ஞானிகளின் மேனி பொன்னிறமாகும்; அப்பொன்னிறத்தைத் தன்னைப் பூசுவார் மேனிக்கு நல்கி ஞானிகளாக்குவதால், “அறிவாம் உரு அடைவார்” என உரைக்கின்றார். கண் காது முதலிய பொறி ஐந்தும் ஒன்றி லொன்று வேறுபட்ட நெறிகளில் செல்லுவன வாதலால், “மிக மாறிய பொறியின் வழி” எனப்படுகின்றது. பொறிவழிச் செல்வோர் துன்புற்று வருந்துவதால் அவற்றை யடக்கி நன்னெறியிற் செல்லச் செய்யும் திறம் பெற்று இன்புறுவர் என்பாராய்ப் “பொறி வழியின் மேவா நலம் மிகுவார்” என்றும், நிலையான இன்ப வாழ்வு பெறுவார் என்றற்குச் “சகமாறினும் உயர்வானிலை தாமாறினும் அழியார்” என்றும் அறிவிக்கின்றார்.
இதனால் ஆறுமுக முதல்வா என்று ஓதித் திருநீற்றை யணிபவர் பெறும் நலம் கூறியவாறாம். (8)
|