363.

    சிந்தாமணி நிதிஐந்தரு செழிக்கும்புவ னமுமோர்
    நந்தாவெழில் உருவும்பெரு நலனும்கதி நலனும்
    இந்தாவெனத் தருவார்தமை இரந்தார்களுக் கெல்லாம்
    கந்தாசிவன் மைந்தாவெனக் கனநீறணிந் திடிலே.

உரை:

     கந்தா, சிவன் மைந்தா என்று சொல்லிப் பெருமை பொருந்திய திருநீற்றை யணிபவர்கள் சிந்தாமணியையும், நிதிகளையும், ஐவகைத் தெய்வ மரங்கள் வளரும் இந்திரனுலகத்தையும், ஒப்பற்ற கெடாத அழகு பொருந்திய மேனியையும் பெருநலங்களையும், நல்ல கதிகளையும் எய்தித் தம்பால் வந்து ஈயென இரப்பவர்க்கு இந்தா பெற்றுக் கொள் என்று வழங்கும் செல்வராகுவார்கள், எ. று.

     சிந்தாமணி - செல்வப் பேறு குறித்துத் தவஞ் செய்வோர் பெறும் மணிவகை. நிதி - சங்க நிதி, பதும நிதி, ஐந்தரு செழிக்கும் புவனம் - கற்பகம் மந்தாரம் என வரும் ஐவகைத் தெய்வ மரங்கள் செழித்து வளரும் இந்திர லோகம். புவனம் - உலகம். நந்துதல் - கெடுதல். பெருநலம், என்பது உடம்பொடு கூடியிருந்து பெறும் மிக்க நலம். கதி - உடம்பின் நீங்கிய பின் பெறுவது, இந்தா, கொடுப்போர் அழைக்கும் குறிப்பு மொழி.

     இதனால், கந்தா, சிவன் மைந்தா என்று சொல்லித் திருநீற்றை யணிவோர் அடையும் பயன் கூறியவாறாம்.

     (9)