31. உறுதி யுணர்த்தல

        இதன்கண் உறுதி என்பது உரியதும், இன்றியமையாததும் ஆகிய பொருள் என்பதாம். தணிகை முருகன் திருவருளும் திருவடிப் பேறும் பெற விழைவார்க்கு அவனுக்குரிய ஆறெழுத் தோதுதலும், திருவெண்ணீறும், வழிபாடும் உறுதிப் பொருளென உலகவர்க்கு உரைப்பதாம்.

கட்டளைக் கலித்துறை

365.

    மஞ்சேர் பிணிமிடி யாதியை நோக்கி வருந்துறுமென்
    னெஞ்சே தணிகைய னாறெழுத் துண்டுவெண் ணீறுண்டுநீ
    எஞ்சே லிரவும் பகலும் துதிசெய் திடுதிகண்டாய்
    அஞ்சே லிதுசத் தியமாமென் சொல்லை அறிந்துகொண்டே.

உரை:

என்னுடைய நெஞ்சமே, பனி மேகம் போல் உடலின்கண் தோன்றும் நோய், வறுமை முதலியவற்றை யெண்ணி வருந்தும் நீ தணிகைப் பதியில் எழுந்தருளும் முருகப் பெருமானுடைய ஆறெழுத்தும், வெண்மையான திருநீறும் உளவாகலின், ஊக்கம் குறைய வேண்டா; இரவும் பகலும் அவனைத் துதி செய்க; யான் சொல்லுமிது சத்தியம் என்று அறிந்து கொண்டு அஞ்ச வேண்டுவதில்லை, எ. று.

     தோன்றி விரைந்து கெடுதற்கு மஞ்சு உவமை யாயிற்று. ஏர், உவமவுருபு. நோயும் வறுமையும் பனிமேகம் போன்று தோன்றி நெஞ்சை வருத்தும் இயல்பின வாதலால், “பிணி மிடி யாதியை நோக்கி வருந்துறும் என் நெஞ்சே” என்கின்றார். முருகப் பெருமானுக்குரிய ஆறெழுத்தையும் ஓதித் திருநீறணிந்து கொள்ளின் அப்பிணியும் வறுமையும் விரைந்து கெடும் என்பார், “தணிகையன் ஆறெழுத்துண்டு வெண்ணீறுண்டு” என விளம்புகிறார். எஞ்சுதல் - குறைதல். இங்கே எஞ்சுதல் என்றது ஊக்கம் குன்றுதலாம். ஆறெழுத்தையும் ஓதித் திருநீறணிந்து கொள்வதுமன்றி இரவு பகலென எண்ணாது பெருமான் திருப்புகழைச் சொல்லித் துதிக்க வேண்டும் என்பாராய், “இரவும் பகலும் துதி செய் திடுதி” என்று பணிக்கின்றார். பிணி மிடிகளை எண்ணும் போதே அச்சம் தோன்றி அறிவை அயர்வித்தலால் அதனைத் தெளிவிக்கும் பொருட்டு இது சாத்தியமாம் என்றும், என் சொல்லை அறிவிற் கொண்டு அஞ்சுதல் ஒழிக என வற்புறுத்துவாராய், “அஞ்சேல்” என்று உரைக்கின்றார். யான் சொல்லும் இது உண்மை யென்று என் சொல்லால் அறிந்து கொள்க என்பது கருத்து.

     இதனால் ஆறெழுத்தோதி வெண்ணீறணிந்து முருகனைத் துதித்தால் நோயும் வறுமையும் நீங்கும் என்று அறிவுறுத்தவாறாம்.

     (1)