366.

    அறியாத நம்பிணி யாதியை நீக்கும் அருள்மருந்தின்
    நெறியாந் தணிகையன் ஆறெழுத் துண்டுவெண் ணீறுண்டுநீ
    எறியா திரவும் பகலும் துதிசெய் திடுதிகண்டாய்
    குறியா திருக்கலை யென்னாணை என்றன் குணநெஞ்சமே.

உரை:

      எனது நற்குணம் பொருந்திய நெஞ்சமே, நம்மை யறியாமல் வந்து தாக்கும் நோய் முதலியவற்றைப் போக்கி நலஞ் செய்யும் திருவருளாகிய மருந்தைப் பெறுதற்குரிய நெறியாகும் தணிகை முருகப் பெருமானுடைய ஆறெழுத்தும் திருவெண்ணீறும் உள்ளன; அவற்றை மறவாமல் இரவும் பகலும் போற்றித் துதிப்பாயாக, இதனை நெஞ்சில் குறிக் கொள்ளாது இருத்தல் கூடாது; இது என் ஆணை, எ. று.

     நம்மை வருத்தும் நோய்கள் நம்மை யறியாமலே வருவன வாதலால் அவற்றை, “அறியாத நம்பிணி ஆதி” எனவும், அதற்குத் திருவருள் உருவாய் விளங்கும் மருந்தாவன முருகப் பெருமானுடைய ஆறெழுத்தும் வெண்ணீறும் என்பார், “அருள் மருந்தின் நெறியாம் தணிகையன் ஆறெழுத்துண்டு வெண்ணீறுண்டு” எனவும், இதனை மறவாமல் கைக்கொண்டு இரவு பகல் ஓதி வழிபட வேண்டும் என்பார், “எறியா திரவும் பகலும் துதிசெய் திடுதி கண்டாய்” எனவும், புறக்கணிப்பால் உள்ளத்தில் கொள்ளா தொழிதல் கூடாது என்றற்குக் “குறியா திருக்கலை” எனவும், மேலும் வற்புறுத்தற்கு, “என் ஆணை” எனவும் இயம்புகின்றார். தனது சொல்லை ஏற்று அதன்படி ஒழுக வேண்டும் என நெஞ்சினை நயப்படுத்துதற்குக் “குண நெஞ்சமே” என்று கூறுகின்றார். இனி முக்குணத்தின் வழி நின்று தெளிவும், கலக்கமும், மயக்கமும் எய்துவது பற்றிக் “குண நெஞ்சம்” என்றார் எனினும் பொருந்தும்.

     இதனாலும் மேற் கூறிய ஆறெழுத்தும் வெண்ணீறும் உறுதிப் பொருளாமென வற்புறுத்தியவாறாம்.

     (2)