367.

    என்றே பிணிகள் ஒழியுமென் றேதுயர் எய்தியிடேல்
    நின்றே தணிகையன் ஆறெழுத் துண்டுவெண் ணீறுண்டுநீ
    இன்றே இரவும் பகலும் துதிசெய் திடுதிகண்டாய்
    நன்றேஎக் காலமும் வாழிய வாழிய நன்னெஞ்சமே.

உரை:

      எனது நல்ல நெஞ்சமே, நம்மிடம் வந்துள்ள நோய் வகைகள் எப்பொழுது நீங்கும் என்று எண்ணி மனத்தில் துன்புற வேண்டா; தணிகைப் பெருமானுடைய ஆறெழுத்தும் வெண்ணீறும் உள்ளன என்று அவற்றின் வழிநின்று இரவு பகல் என்னாது இப்பொழுதே துதி செய்வாயாக, எக்காலத்தும் அது நல்லது, வாழ்வாயாக, எ.று.

     நோய் தோன்றிய வழி அதனால் வருத்த முறுவோர் அஃது எப்போது தீருமோ என எண்ணித் துன்புறுவதியல்பாதலால் அதனை நீ செய்யற்க என்பார், “நன் நெஞ்சமே என்றே பிணிகள் ஒழியு மென்றே துயர் எய்தியிடேல்” என்று தெரிவிக்கின்றார். ஆறெழுத்தும் வெண்ணீறும் ஆகியவற்றின் வழி நிற்றலாவது, ஆறெழுத்தை மானதம், மந்தம் என்ற வகையில் ஓதுவதும், திருநீற்றை உத்தூளனம், திரிபுண்டரம் என்ற வகையிலணிவதுமாம், இன்று - இப்பொழுது. இன்ன பொழுதில் தான் ஓதுவது, இன்ன பொழுதி லணிவது என்ற வரையறை யில்லாமை தோன்ற, “இன்றே இரவும் பகலும் துதிசெய் திடுதி” என்று வற்புறுத்துகின்றார். இரவும், பகலும், எக்காலத்தும் ஓதுவதும் துதிப்பதும் நன்மையே விளைவிக்கும் என யாப்புறுத்தற்கு, “நன்றே எக்காலமும்” என நவில்கின்றார். வாழிய வாழிய என்ற அடுக்கு நலத்தின் நன்மையை வலியுறுத்தற் பொருட்டு.

     இதனால், ஆறெழுத்தும், வெண்ணீறும், துதி செய்தலும் எக்காலத்தும் நன்று என்பது உணர்த்தியவாறாம்.

     (3)