32. எண்ணத் தேங்கல்
அஃதாவது மேற்கொண்ட செயலின் விளைவுபற்றி என்னாகுமோ என எண்ணமிட்டு ஆகுமோ ஆகாதோ என மனம் கலங்கிச் சுழன்று வருந்துவதாம். இதன்கண் வரும் இரண்டு பாட்டுக்களிலும் முருகப் பெருமான் அருள் செய்வனோ, செய்யானோ எனவும், தான் ஆனந்தம் பெற முடியுமோ அன்றித் துன்பத்தில் ஆழ்வேனோ எனக் கலங்கி மொழிவது காணலாம்.
எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் 368. போதுகொண் டவனும் மாலும்நின் றேத்தும்
புண்ணிய நின்திரு அடிக்கே
யாதுகொண் டடைகேன் யாதுமேற் செய்கேன்
யாதுநின் திருவுளம் அறியேன்
தீதுகொண் டவன்என் றெனக்கருள் சிறிதும்
செய்திடா திருப்பையோ சிறியோன்
ஏதிலன் செயலொன் றிலையெனக் கருதி
ஈவையோ தணிகைவாழ் இறையே.
உரை: தணிகைப் பதியில் எழுந்தருளும் முருகனுடைய இறைவனே, தாமரைப்பூவை இடமாகக் கொண்ட பிரமனும் திருமாலும் திருமுன் நின்று வழிபடும் புண்ணியனே, யாது கொண்டு உன் திருவடியை அடைவேன்? அதன்மேல் எதனைச் செய்வேன்? நின்னுடைய திருவுள்ளக் கருத்து இன்னது என்று அறிகிலேன்; தீமைகள் புரிந்தவன் என்று எண்ணி எனக்குத் திருவருளைச் சிறிதேனும் செய்யா தொழிகுவாயோ? இவன் அறிவினால் சிறியவன்; திருவருளைப் பெறுதற்கு ஏது ஒன்றுமில்லாதவன்; இவன்பால் வேறு செய்தற்குரியது ஒன்றுமில்லை என்று எண்ணி அருள் புரிவாயோ? எ. று.
தணிகைப் பதியில் அருளரசு மேற்கொண்டு உயிர்கட்கு முறை செய்வதுபற்றித் “தணிகைவாழ் இறையே” என்று சாற்றுகிறார். போது கொண்டவன் என்பதில் போது, தாமரைப் பூவின் மேற்று. புண்ணியப் பேறு குறித்துப் பிரமனும் திருமாலும் முருகன் திருமுன் நின்று போற்றி செய்து வழிபடுவதால் பிரமனும், திருமாலும் “நின்றேத்தும் புண்ணியனே” என்கின்றார். புண்ணியன், விளியேற்றுப் புண்ணிய என நின்றது. பெரியோர்கள் திருமுன் செல்வோர் யாதேனும் கையுறை கொண்டு செல்வது உலகியல் மரபு. அதனால் “நின் திருவடிக்கு யாது கொண்டு அடைகேன்” எனவும், திருமுன் சென்ற விடத்து அப்பெரியவர் குறிப்பறிந்து செய்வன செய்தல் நல்லொழுக்கமாதலால், “யாது மேற் செய்கேன் யாது நின் திருவுளம் அறியேன்” எனவும், உலகியல் பற்றி மனத்தெழும் எண்ணத்தை எடுத்துரைக்கின்றார். முருகப் பெருமானுடைய திருவுள்ளக் கிடக்கையை அறிவால் அறிதல் இயலாமையால் திருவருளின்பத்தை நல்க மறுப்பானோ அல்லது சிறிதளவேனும் நல்குவானோ என அலமந்துழலும் நிலையைத் “தீது கொண்டவன் என்று எனக்கு அருள் சிறிதும் செய்திடாது இருப்பையோ” என்றும், “சிறியேன் எதிலன் செயல் ஒன்றிலை எனக்கருதி ஈவையோ” என்றும் இயம்புகின்றார். தீது - தீயவற்றைச் செய்வதால் உண்டாவது. தீது செய்தவர்க்கு அருள் நலம் எய்தாது என்பதுபற்றி, “அருள் சிறிதும் செய்திடா திருப்பையோ” என எண்ணுகின்றார். அறிவால் சிறியவனாயினும் அருள் நலம் பெறுதற்குரிய ஏது ஒன்றும் இலனாயினும் அருள் பெறாமைக்குரிய செயல் ஒன்றும் இவன்பால் இல்லை என்று எண்ணி திருவருள் இன்பத்தை எனக்கு அருளலாம் என நினைந்து, “சிறியோன் ஏதிலன் செயல் ஒன்றிலை எனக்கருதி ஈவையோ” என உரைக்கின்றார். ஏது - காரணம்.
இதனால் முருகன் திருவருள் தனக்கு எய்துமோ, எய்தாதோ என எண்ணி ஏங்கியவாறாம். (1)
|