369.

    வாழ்வனோ நின்பொன் னடிநிழல் கிடைத்தே
        வயங்குமா னந்தவெள் ளத்துள்
    ஆழ்வனோ எளியேன் அல்லதிவ் வுலகில்
        அறஞ்செயாக் கொடியர்பாற் சென்றே
    தாழ்வனோ தாழ்ந்த பணிபுரிந் தவமே
        சஞ்சரித் துழன்றுவெந் நரகில்
    வீழ்வனோ இஃதென் றறிகிலேன் தணிகை
        வெற்பினுள் ஒளிரருள் விளக்கே.

உரை:

      தணிகை மலையிலிருந்து அருள் விளக்கம் செய்யும் விளக்காகிய முருகப் பெருமானே, உன்னுடைய திருவடி நிழலை அடைந்து வாழ்வேனா; அங்கே விளங்குகின்ற இன்ப வெள்ளத்தில் ஆழ்ந்து மகிழ்வேனோ; அல்லது எளியனாகிய யான் இவ்வுலகில் நல்வினை செய்யாத கொடியவரிடம் சென்று தாழ்வு அடைவேனோ; கீழான செயல்களைச் செய்து வீணாக எங்கும் திரிந்து வருந்தி வெவ்விய நரகத்தில் வீழ்வேனோ; இன்னது எய்தும் என்று அறிய மாட்டாது ஏங்குகின்றேன், எ. று.

     பொன்னடி - அழகிய திருவடி. ஈண்டுத் திருவடி என்றது திருவடி ஞானம். ஞானவாழ்வு பெறுவோர் பேரின்பம் பெற்று மகிழ்வராதலால், “நின் பொன்னடி நிழல் கிடைத்து வாழ்வனோ” என்றும், “வயங்கும் ஆனந்த வெள்ளத்துள் ஆழ்வனோ” என்றும் எண்ணுகின்றார். எண்ணத்தின் சுழற்சியால் மறுதலை நினைவு எழுந்ததும் தனது எளிமை காரணமாகத் தீயவர் சூழலையடைந்து கெடுவனோ என அஞ்சுவாராய், “இவ்வுலகில் அறஞ் செய்யாக் கொடியார்பாற் சென்று தாழ்வனோ” என்றும், அதனால் நரக வாழ்வே கிடைக்கும் என்ற நூலோர் கூற்றை நினைவுற்றுத் “தாழ்ந்த பணி புரிந்த அவமே சஞ்சரித் துழன்று வெந்நரகில் வீழ்வனோ” என்று நினைந்து ஏக்கமுறுகின்றார். வயங்கும் ஆனந்தம் - மிக்குற்று விளங்கும் இன்பம். அறஞ்செய்யாக் கொடியர் - அறமாகிய நல்வினை செய்யாத பாவிகள். சென்று தாழ்வனோ என்றது அடைந்து ஆதரவு வேண்டிக் கெடுவேனோ என்பது. தாழ்ந்த பணி - நரகம் புகுதற்குரிய கீழ்மையான பணி. இன்னது எய்தும் என்ற துணிவு பெறலாகாமையால் இஃது என்று அறிகிலேன் என ஏங்கி உரைக்கின்றார்.

     இதனால் முருகன் திருவடி இன்பம் பெறலாகுமோ அல்லது நரகில் வீழ்ந்து வருந்துதல் நேருமோ என எண்ணி ஏங்கியவாறாம்.

     (2)