37. கோலக் குறமான் கணவா சரணம்
குலமா மணியே சரணம் சரணம்
சீலத்தவருக் கருள்வோய் சரணம்
சிவனார் புதல்வா சரணம் சரணம்
ஞாலத் துயர்தீர் நலனே சரணம்
நடுவாகிய நல்லொளியே சரணம்
காலற் றெறுவோய் சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.
உரை: அழகிய குறமகளாகிய வள்ளி நாயகியார் கணவனே, உயர் குலத்துப் பெரிய மாணிக்க மணியே, சீலமுடைய பெரியோர்க்கு அருள் செய்பவனே, சிவபெருமான் மகனே, நிலத்தில் வாழும் மக்களின் துன்பத்தைப் போக்குபவனே, நீதி வடிவாகிய நல்ல ஒளிப் பொருளே, நமன் போந்து செய்யும் துன்பத்தை நீக்குபவனே, கந்தசாமிக் கடவுளே, உன்திருவடியே எனக்குப் புகலிடமாம். எ. று.
“குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் மடவரல் வள்ளி” (முருகு) என நக்கீரரும், “குறவி தோள் மணந்த செல்வக் குமரவேள்” (பெருவேளூர்) எனத் திருநாவுக்கரசரும் பிற சான்றோரும் புகழ்ந்தோதுதலால், “கோலக் குறமான் கணவா” என்று போற்றுகின்றார். மணிவகைகளில் மிகச் சிறந்ததாகிய மாணிக்கமணி போல் நிறமும் ஒளியு முடையனாதலால் “குலமா மணியே” என்று குறிக்கின்றார். நல்லொழுக்க முடைய பெரியோர்க்கு வேண்டும் அருளை வழங்குவது கடனாதலால், “சீலத் தவருக்கு அருள்வோய்” என்றும், சிவபிரான் மகனாகும் சிறப்புடைமை பற்றிச் “சிவனார் புதல்வா” என்றும் செப்புகின்றார். மண்ணக வாழ்வில் மக்கள் இன்பத்தினும் துன்பமே மிகப்பெறுவதனால், அதனை அவ்வப்போது களைந்து அவர்களை வாழ்விக்கும் அருட்செயலை விதந்து, “ஞாலத் துயர்தீர் நலனே” என்று பரவுகின்றார். “மண்ணுளே திரியும் போது வருவன பலவும் குற்றம்” (நனிபள்ளி) எனப் பெரியோர் மக்கட் கெய்தும் துன்பத்தை எடுத்துரைத்தல் காண்க. நீதிவடிவின னாதலால், “நடுவாகிய நல்லொளியே” என்றும், எம பயம் தீர்க்கும் இறைவன் என்பது கொண்டு “காலன் தெறுவோய்” என்றும் இயம்புகின்றார்.
இதனால், குறமான் கணவன், குலமணி என்பன முதலிய சிறப்புக்களை விதந்தோதி முருகக் கடவுளின் திருவடியே புகலென விளம்பியவாறாம். (37)
|