373. கண்ணப்ப னென்னும் திருப்பெய ரால்உல கம்புகழும்
திண்ணப்ப னேத்தும் சிவனார் மகனுக்குத் தெண்டனிட்ட
விண்ணப்ப மொன்றிந்த மேதினி மாயையில் வீழ்வதறுத்
தெண்ணப் படும்நின் திருவருள் ஈகவிவ் வேழையற்கே.
உரை: கண்ணப்பன் என்று அழகிய பெயர் சூட்டி உலகத்தவர் புகழ்ந்து பரவும் திண்ணப்பனார் போற்றும் சிவபெருமான் மகனாகிய முருகக் கடவுட்கு வணங்கிச் செய்யும் விண்ணப்பம் ஒன்று இது; மண்ணியல் வாழ்வில் உண்டாகும் மயக்கத்தில் வீழ்ந்து கெடும் நிலையை மாற்றுதற்கு எண்ணிப் பெற்றுக் கொள்ளப்படும் நின் திருவருளை ஏழையாகிய எனக்கு அளித்தருளுக, எ. று.
சிவபெருமான் கண்ணில் தம் கண்ணை இடந்து அப்பினதால் திண்ணப்பர் என்ற வேட்டுவர் கண்ணப்பர் என்று பெயர் பெற்ற வரலாற்றை நினைவிற் கொண்டு, “கண்ணப்ப னென்னும் திருப்பெயரால் உலகம் புகழும் திண்ணப்பன்” என்று சிறப்பிக்கின்றார். கண்ணை அப்பிய காலத்தில் சிவபெருமான், “நில்லு கண்ணப்ப” என்று சொல்லித் தடுத்தருளினமையால், “கண்ணப்பன்” என்ற பெயர் தோன்றியது என்பது பற்றிக், “கண்ணப்ப னென்னும் திருப்பெயர்” என்று விதந்து கூறுகின்றார். “கண்ணப்பன் கண்ணப்பக் கண்டுகந்தார்” (கழிப்) என்று திருநாவுக்கரசர் முதலியோர் அத்திருப் பெயரையையே வழங்குவதால் உலகம் புகழ்கிறது என ஓதுகிறார். திண்ணப்பன் என்பது பெற்றோர் இட்ட பெயர். “தத்தையாம் தாய் தந்தை நாகனாம் தன்பிறப்புப், பொத்தப்பி நாட்டுடுப்பூர் வேடுவனாம் - தித்திக்கும் திண்ணப்பனாம் சிறுபேர் செய்தவத்தாற் காளத்திக் கண்ணப்பனாய் நின்றான் காண்” என்று (பதினோ) நக்கீரதேவர் கூறுவது காண்க. திருவொற்றியூரில் கிடைக்காத கற்பூரம் திருத்தணிகையில் கிடைக்கப் பெறலாமாகவும் கிடைக்குங்கொலோ என ஐயமுறுவது மயக்க வுணர்வாதலை நினைந்து அஞ்சும் குறிப்புத் தோன்ற, “இந்த மேதினி மாயையில் வீழ்வது அறுத்து” எனவும், திருவருள் ஒன்றே மாயை மறைப்பைக் கிழித்தெறிந்து ஞானம் பெறுவிப்பதாகலின், “எண்ணப்படும் நின் திருவருள் ஈகவிவ் ஏழையற்கே” எனவும் உரைக்கின்றார்.
இதனால் திருமுன் ஏற்றுதற்குப் பாளிதம் கிடைக்காமைக்கு வருந்தும் மன மயக்கத்தை நீக்குதற்குரியதென எண்ணப்படும் திருவருளை வேண்டியவாறு பெற்றாம். (4)
|