34. அடியார் பணி அருள வேண்டல்

        அஃதாவது அடியார்கட்குத் தொண்டு செய்யும் மனப்பாண்பு உண்டாகுமாறு வேண்டுதல் செய்வது. பெண்ணொருத்திபால் காதல் கொண்டவன் அவள் சுற்றத்தார்க்குச் சிறப்புச் செய்து மகிழ்வது போல இறைவன்பால் அன்பு கொண்டார் அவனுடைய அடியாரிடத்து அன்பும் பணிவும் கொண்டு அவர் ஏவின செய்து இன்புறுவர். அம்முறையில் தணிகை முருகனிடத் துண்டாகிய அன்பால் அவன் அடியார்க்கு அன்பு செய்ய விழைகின்ற வள்ளலார் அது குறித்து முருகனை வேண்டுகின்றார். “இனி நான் அவன் தன் தொண்டர் தொண்டர்க்குத் தொழும்பாய்த் திரியத் தொடங்கினனே” (கோயில் நாள் 38) என்று பட்டினத்துப் பிள்ளையார் கூறுவது காண்க. தொண்டர்க்குத் தொண்டு செய்வது சிவபுண்ணியம் என்பாராய், “எண்ணில் புகழ் ஈசன் தன்னருள் பெற்றோர்க்கும் உண்டு கொலோ திண்ணியமாமதில் ஆரூர்த் திருமூலட்டானன் எங்கள் புண்ணியன் தன்னடித் தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியமே” (ஆரூர்) என்று திருநாவுக்கரசர் விரும்பி உரைப்பது காண்க. இங்கே தொண்டர்க்குத் தொண்டு செய்யும் சிவபுண்ணியமே யன்றி அதனை வலியுறுத்தரண் செய்யும் திருவடிப் பேற்றையும் விரும்பிக் கேட்கின்றார்.

கட்டளைக் கலித்துறை

374.

    எப்பா லவரும் இறைஞ்சும் தணிகை இருந்தருள்என்
    அப்பாஉன் பொன்னடிக் கென்நெஞ் சகம்இட மாக்கிமிக்க
    வெப்பான நஞ்சன வஞ்சகர் பாற்செலும் வெந்துயர்நீத்
    திப்பாரில் நின்னடி யார்க்கேவல் செய்ய வெனக்கருளே.

உரை:

     எங்கே யுள்ளவரும் வந்து வணங்குகின்ற தணிகையில் எழுந்தருளுகின்ற என்னுடைய அப்பனே; உன்னுடைய அழகிய திருவடிகளுக்கு என் மனத்தை இடமாக்கி, மிகவும் வெம்மை பொருந்திய விடம் போன்ற வஞ்சகர்களிடம் சென்று சேர்கின்ற வெவ்விய துன்பத்தை நீக்கி இவ்வுலகில் நினக்கு அடியராயினார்க்கு ஏவிய பணி செய்யும் நற்செயலை எனக்கு அருளுவாயாக, எ. று.

     எத்திசையில் வாழ்பவராயினும் ஆண், பெண், உயர்ந்தோர், தாழ்ந்தோர், செல்வர், வறியவர் என்ற வேற்றுமை யின்றி வழிபடுவதால், “எப்பாலவரும் இறைஞ்சும் தணிகை” என்றும், அப்பெருமானைத் தனக்குத் தந்தையாகக் கருதி அன்பு செய்து ஒழுகுமாறு தோன்றத் “தணிகை இருந்தருள் என் அப்பா” என்றும் இயம்புகின்றார். முருகன் திருவடியை எப்பொழுதும் நினைக்கும் இயல்புடையதாக நெஞ்சினைப் பண்படுத்திக் கொண்டு இவ்வுலகில் நின் திருவடியையே நினைவிற் கொண்டு ஒழுகும் அடியார்களைச் சார்ந்து அவர்கள் ஏவிய பணிகளை அவருள்ளம் உவப்பச் செய்பவனாதல் வேண்டும்; அதற்கும் நினது திருவருள் துணையாம் என்பார், “உன் பொன்னடிக்கு என் நெஞ்சகம் இடமாக்கி இப்பாரில் நின்னடியார்க்கு ஏவல் செய்ய எனக்கருளே” என்றும் விரும்பி வேண்டுகிறார். விடம் போன்ற எண்ணங்களை நெஞ்சிலேயுடைய வஞ்சகர்களை, “மிக்க வெப்பான நஞ்சன வஞ்சகர்” எனவும், அவர் வஞ்ச மறியாது உதவி வேண்டிச் சார்ந்து துன்பம் மிகுந்து வருந்தினமை தோன்ற, “வஞ்சகர்பாற் செலும் வெந்துயர் நீத்து” எனவும் இசைக்கின்றார். வஞ்சகர் உறவு அடியார்க்குப் பணி புரியும் நல்லற நினைவு செயல்களைக் கெடுத்தழிக்கு மாதலால் அதனைப் பயன்மேல் வைத்து, “அவர்பாற் செலும் துயர் நீத்து” என்று சொல்லுகிறார். நஞ்சு அறிவை மயக்கி உயிரைப் போக்குவது பற்றி, “மிக்க வெப்பான நஞ்சு” என விளம்புகிறார்.

     இதனால் அடியார்க்கு அடிப்பணி செய்ய எழும் வேட்கையைத் தெரிவித்து அதற்கு இடையூறு செய்யும் தீயவர் தொடர்பு உண்டாகாதபடி அருளுக என வேண்டியவாறாம்.

     (1)