376.

    வாளாருங் கண்ணியர் மாயையை நீக்கி மலிகரணக்
    கோளாகும் வாதனை நீத்துமெய்ஞ் ஞானக் குறிகொடுநின்
    தாளாகும் நீழ லதுசார்ந்து நிற்கத் தகுந்ததிரு
    நாளாகும் நாளெந்த நாளறி யேன்தணி காசலனே.

உரை:

     தணிகை மலையையுடைய பெருமானே, ஒளி பொருந்திய கண்களையுடைய மகளிரின் ஆசையால் உண்டாகும் மயக்கத்தைப் போக்கி மனம் முதலிய கரணங்களின் செயல்களாகிய வாதனையை யொழித்து மெய்ஞ்ஞானம் காட்டும் நெறியைக் குறிக்கொண்டு நின் திருவடி நல்கும் இனிய நீழலை யடைந்து நிற்க அமையும் நாள் எனக்குத் திருநாளாகும்; அந்த நாள் எப்போது வருமோ என்று அறிகிலேன், எ.று.

     ஒளி நிறைந்த கண்களால் காணப்பட்டார் உள்ளத்தில் காம வேட்கையை யுண்டு பண்ணும் மங்கையர் செயலை, “வாளாருங் கண்ணியர் மாயை” என்று கூறுகிறார். மலிகரணம் என்பதால் மனம் முதலிய அகக்கரணங்களும், கண் முதலிய புறக் கரணங்களும் கொள்ளப்படும். இவற்றால் உண்டாகும் வாதனை இகழ்ச்சியும் மகிழ்ச்சியுமாகும். இவற்றால் இயற்கையறிவு மறைந்து கெடுதலால் மெய்யுணர்வு காட்டும் குறிப்புணர்வு திருவடிப் பேற்றுக்குத் துணையாதலின், “மலிகரணக் கோளாகும் வாதனை நீத்து மெய்ஞ்ஞானக் குறிகொடு” என்று உரைக்கின்றார். கரணக்கோள் - கரணங்களின் கொள்கை. மெய்ஞ்ஞானக் குறியாவது, திருவடியே சிந்திக்கும் ஞானத் திண்மை. “தாளாகும் நீழல்” என்பது, திருவடிக் கீழிடம். திருவடி நீழல், “மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றது” எனத் திருநாவுக்கரசர் விளங்குகின்றார். திருவடி நீழலின் இனிமை பற்றி அதனைச் சாரும் நாள் திருநாள் எனப்படுகின்றது. அதனை அடையும் நாளை இறைவனா லல்லது பிறரால் அறிய வொண்ணாதாகலின், “எந்த நாள் அறியேன்” என ஏங்குகின்றார்.

     இதனால் இறைவன் திருவடி நீழலைச் சாரும் நாளே திருநாள் எனச் சிறப்பித்தவாறாம்.

     (3)