377. ஊன்பார்க்கு மிவ்வுடற் பொய்ம்மையைத் தேர்தல் ஒழிந்தவமே
மான்பார்க்கும் கண்ணியர் மையலில் வீழும் மயக்கமற்றே
தேன்பார்க்கும் சோலைத் தணிகா சலத்துன் திருவழகை
நான்பார்க்கும் நாளெந்த நாள்மயி லேறிய நாயகனே.
உரை: மயிலேறி வரும் தலைவனே, ஊனாலாகிய இவ்வுடம்பின் நிலையாமையைத் தெளிவதின்றி மான் போன்ற கண்களையுடைய மகளிரது காம மயக்கத்தில் வீணே வீழ்ந்து வருந்தும் மயக்கத்தின் நீங்கித் தேன் துளிக்கும் சோலைகள் நிறைந்த தணிகை மலையில் எழுந்தருளும் உனது சிறந்த அழகை நான் பார்த்து மகிழும் நாள் எந்த நாள், தெரிவித்தருள்க. எ. று.
மெய்யுணர்வு பெற விரும்புவார்க்கு நிலையுடையன இவை, நிலையாதன இவை எனத் தெரிந்துணரும் நல்லறிவு முதற்கண் வேண்டப் படுதலின் அதனைச் செய்யாக் குறையை, “ஊன்பார்க்கும் இவ்வுடற் பொய்ம்மையைத் தேர்தல் ஒழிந்தே” என உரைக்கின்றார். “நிலையாத உலகியல்பு கண்டு நிலையா வாழ்க்கை யல்லேன் என்று அறத்துறந்து” (பெரியபு. திருநா.) என்று சேக்கிழார் பெருமான் தெரிவிப்பது காண்க. மகளிர் தொடர்பு விளைவிக்கும் மயக்கம் மெய்யுணர்வுக்கு இடையூறாதலின், “கண்ணியர் மையலில் வீழும் மயக்கம் அற்றே” என மொழிகின்றார். பூக்கள் நிறைந்த சோலை என்றற்குத் “தேன் பார்க்கும் சோலை” என்று சிறப்பிக்கின்றார்.
இதனால் முருகப் பெருமானது அழகிய திருமுகக் காட்சியைக் காண விரும்பும் வேட்கை தெரிவித்தவாறாம். (4)
|