378. என்னே குறைநமக் கேழைநெஞ் சேமயி லேறிவரும்
மன்னே யெனநெடு மாலும் பிரமனும் வாழ்த்திநிற்கும்
தன்னேர் தணிகைத் தடமலை வாழும்நற் றந்தையருள்
பொன்னேர் திருவடிப் போதுகண் டாய்நம் புகலிடமே.
உரை: அறிவில்லாத நெஞ்சமே, 'மயிலேறி வரும் அருளரசே' என்று நெடிய திருமாலும், பிரமனும் வணங்கி வாழ்த்தி வழிபடும் தனக்குத் தானே நிகராகிய தணிகைப் பெருமலையில் எழுந்தருளும் ஞானத் தந்தையாகிய முருகனுடைய அருள் வழங்கும் அழகிய திருவடித் தாமரைப் பூக்களே நமக்கு வாய்த்த புகலிடமாகு மாதலால் இனி நமக்கு ஒரு குறையும் இல்லை, எ. று.
மன் - மன்னன்; நெடிதுயர்ந்து மண்ணையும் விண்ணையும் அளந்த குறிப்புத் தோன்ற, “நெடுமால்” என்று குறிக்கின்றார். நல்தந்தை என்றவிடத்து நன்மை ஞானப் பொருள் குறித்து நின்றது. பொன் - அழகு. புகலிடம் - இறுதியாகப் புகுமிடம். முருகன் அழகைக் காண்பதின்றி அவனது திருவடி நீழலைச் சார்வது கூடாமை முன் பாட்டில், “அழகு காணும் நாள் எந்நாள்” என்றவர், இப்பாட்டில் அழகு கண்டு சேரும் புகலிடம் இது வென்று வற்புறுத்துகின்றார்.
இதனால், முருகன் திருவடி நீழலே பெருமை யுடையது என்று வற்புறுத்துவாறாம். (5)
|