379.

    பேதைநெஞ் சேயென்றன் பின்போந் திடுதியிப் பேயுலக
    வாதையஞ் சேல்பொறி வாய்க்கலங் கேலிறை யும்மயங்கேல்
    போதையெஞ் சேல்தணி காசலம் போயப் பொருப்பமர்ந்த
    தாதையஞ் சேவடிக் கீழ்க்குடி யாகத் தயங்குவமே.

உரை:

      பேதைமையுடைய நெஞ்சமே, என் பின் வருக; பேய்த் தன்மையையுடைய உலகியல் துன்பத்துக்கு அஞ்ச வேண்டா; கண் முதலிய பொறி வழிச் சென்று கலக்கமுற வேண்டா; சிறிதும் மயங்குதல் கூடாது; அறிவைத் தளர விடாதே; தணிகைமலைக்குச் சென்று அதன் மேல் எழுந்தருளும் ஞானத் தந்தையாகிய முருகப் பெருமான் சேவடிக் கீழ் நிலைத்த குடியாகத் தங்கி விளங்கலாம், எ. று.

     பேதைமை - துன்பத்தைக் கொண்டு இன்பத்தைக் கைவிடுதல். இதுகாறும் என் வழி நில்லாது புலன் வழிச் சென்று அலைந்ததை நீக்கி, இனி என் வழி வருக என அழைப்பாராய், “நெஞ்சே என்றன் பின் போந்திடுதி” என்றும், பேய்க் கோட்பட்டாரைப் போல உலகியல் ஆசைகள் நெஞ்சைப் பற்றி வருந்துவன வாதலின், இனி அவற்றிற்கு அஞ்ச வேண்டா என்பார், “இப் பேயுலக வாதை அஞ்சேல்” என்றும், கண் முதலிய பொறியினிடத்தே நின்று புலன்கள் மேற் சென்று கலக்க முறுவது நெஞ்சின் செயலாதலால், இனி அவ்வாறு கலங்க வேண்டா என்றற்குப் “பொறிவாய்க் கலங்கேல்” என்றும், பொறி புலன்களால் எய்தும் இன்பங்களைத் துறப்பது எங்ஙனம் எனச் சிறிதும் மயங்க வேண்டா என்பார், “இறையும் மயங்கேல்” என்றும், கலக்கமும் மயக்கமும் மீளத் தாக்காமைக்கு அரண் செய்வது திருவருள் ஞானமாதலால் அதனை இடைவிடாது நினைவாயாக என்பார், “போதை யெஞ்சேல்” என்றும் இடைவிடாது நினைவாயாக என்பார், “போதை யெஞ்சேல்” என்றும் அறிவுறுத்துகின்றார். அதனால் விளையும் பயன் இது என்றற்குத் “தணிகைப் பொருப்பமர்ந்த தாதையஞ் சேவடிக் கீழ்க் குடியாகத் தயங்குவம்” என்றும் தெளிவிக்கின்றார். தயங்குதல் - விளங்குதல்.

     இதனால் திருவடிப் பேறு எய்தி நிலை பெறுதற்கு நெறி கூறியவாறாம்.

     (6)