38. நங்கட் கினியாய் சரணம் சரணம்
நந்தா வுயர்சம் பந்தா சரணம்
திங்கட் சடையான் மகனே சரணம்
சிவை தந்தருளும் புதல்வா சரணம்
துங்கச் சுகநன் றருள்வோய் சரணம்
சுரர் வாழ்த்திடுநம் துரையே சரணம்
கங்கைக் கொருமா மதலாய் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.
உரை: எங்களுக்கு இனியவனே, குன்றாத வுயர்வுடைய சம்பந்தப் பெருமானே, பிறைத் திங்களைச் சூடிய சடையையுடைய சிவபெருமான் மகனே, பார்வதி தந்தருளிய நற் புதல்வனே, உயரிய இன்ப வாழ்வை மிக நல்குபவனே, தேவர்கள் வாழ்த்தி மகிழும் எங்கள் தலைவனே, கங்கை மடியிலேந்தி வளர்த்த குழந்தையே, கந்தசாமிக் கடவுளே, உன் திருவடியே எனக்குப் புகலிடமாம். எ. று.
நினைக்கும் நெஞ்சின்கண் தேனூறி இன்புறுத்தும் திறத்தினனாதலால், “நங்கட்கு இனியாய்” என்றும், முருகப் பெருமானே பின்பு திருஞான சம்பந்தராய்த் தோன்றினார் என்ற கருத்து பிற்காலத்தே நிலவினமையால், “சம்பந்தா” என்றும், ஞானசம்பந்தரது புகழ் அன்று முதல் நின்று நிலவுதலால், “நந்தா வுயர் சம்பந்தா” என்றும் நவில்கின்றார். பிறை சூடிய பெருமானாதலால், சிவனைத் “திங்கட் சடையான்” என்றும், உயிர்கட்குச் சிவபோக மருளும் சிவசத்தியாதல் பற்றிப் பார்வதியைச் “சிவை” என்றும் இயம்புகிறார். சிவனென்னும் ஆண்பாற் பெயர்க்குப் பெண்பால் “சிவை” என்றலும் உண்டு. துங்கம் - உயர்வு. துங்கச் சுகம், பேரின்பம். நன்று - மிகுதி. துரை என்பது தலைவன் என்னும் பொருளில் கி. பி. பதினேழாம் நூற்றாண்டில் தெலுங்கு மன்னர் ஆட்சியில் தமிழகம் புகுந்த திசைச்சொல்; மிகுதிப் பொருள் குறிக்கும் செந்தமிழ் இயற்சொல்லாகக் கொண்டு மிக்கோன் என்ற பொருளில் வழங்குவதாகக் கோடலும் ஒன்று; பிற்காலத்தே அரச குடும்பத்து ஆண்மக்களைச் சிறப்பித்தழைக்கும் சொல்லாக இத் துரை யென்னும் சொல் வழங்கி வருகிறது. சரவணப் பொய்கையில் கங்கை நீரில் சிறு குழவியாய் வளர்ந்தமையின், “கங்கைக்கு ஒருமா மதலாய்” எனப் பராவுகின்றார்.
இதனால், எங்கட்கு இனியனும் ஞானசம்பந்தனும் பிற நலம் பல வுடையவனுமாகிய கந்தசாமிக் கடவுளே, உன் திருவடி எனக்குப் புகலிடமாகும் என்று வேண்டியவாறாம். (38)
|