35. நாளவம் படாமை வேண்டல்
அஃதாவது வாழ்நாள் வீணாளாகாவாறு செய்து
கோடற்குத் திருவருள் செய்க என வேண்டுவதாம்.
நாளெல்லாம் மகளிர் மயக்கத்திலும் கூட்டத்திலும் வீணே
கழிந்தமை இப்பத்தின்கண் கூறப்படுகிறது. இங்குள்ள
அருட்பாக்கள் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளன.
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
380. குன்றமொத் திலங்கு பணைமுலை நெடுங்கண்
கோதையர் பால்விரைந் தோடிச்
சென்றவிப் புலையேன் மனத்தினை மீட்டுன்
திருவடிக் காக்கு நாள்உளதோ
என்றனி யுயிரே யென்னுடைப் பொருளே
என்னுளத் தினிதெழும் இன்பே
மன்றலம் பொழில்சூழ் தணிகையம் பொருப்பில்
வந்தமர்ந் தருள்செயு மணியே.
உரை: எனது ஒப்பற்ற உயிராயவனே, என்னை ஆட்கொண்ட உறுதிப் பொருளே, என் மனத்தின்கண் இனிமையுறச் சுரக்கும் இன்பமே, மணம் கமழும் பூக்களையுடைய சோலைகள் சூழ்ந்த தணிகை மலைக்குப் போந்து எங்கட்கு அருள் புரியும் மாணிக்க மணியே, மலைபோல் விளங்கும் பருத்தமுலைகளையும் நீண்ட கண்களையு முடைய மகளிர்பால் விரைந்து ஒடியடைந்த புலையனாகிய என் மனத்தை அதன் நெறியினின்றும் மீட்டு உன் திருவடிக் குரியதாக்கும் நாள் எனக்கு உண்டாகுமா? நீதான் அருள் செய்தல் வேண்டும், எ. று.
தனியுயிர் - ஒப்புயர்வற்ற உயிர். யானுடைப் பொருளே என்னாமல், என்னுடைப் பொருளே என்றதனால், என்னை யுடைய உறுதிப் பொருள் எனப் பொருள் உரைக்க வேண்டியதாயிற்று. சிந்திக்குமிடத்து இன்பத் தேன் மனத்தின்கண் சுரப்பதால், “என்னுளத் தினிதெழும் இன்பே” என வுரைக்கின்றார். மன்றல் - பூவின் மணம். தணிகை மலையிற் கோயில் கொண்டு வந்து வணங்கும் அன்பர்க்கு வேண்டும் வரம் அருள்வது தோன்ற, “வந்தமர்ந்தருள் செயும் மணியே” என்று பரவுகின்றார். அடி பரந்து நுனி குவிந்து விளங்கும் மகளிர் முலைக்கு மலையை யுவமம் கூறுவது கவி மரபு. பணைமுலை - பருத்த முலை. கோதை யென்பது மகளிரைக் குறிக்கும் பெயர்களில் ஒன்று. “பூப்புனை மாலையும் மாலைபுனை மாதரும், தோற்புனை வின்னாண் டொடர்கைக் கட்டியும், கோச்சேரன் பெயரும் கோதை யென்றாகும்” என்பதனாற் பெண்ணுக்கு மாலை யென்று பெயராயிற்று எனப் பேராசிரியர் (திருக்கோவை - 1) உரைப்பது காண்க. கொங்கையும் கண்ணுமுடைய விலைமகளிரைக் கண்டதும் மனம் காம வேட்கையுற்று அவர்பால் விரைந்தோடுவது பற்றிக் “கோதையர்பால் விரைந்தோடிச் சென்ற மனத்தினை” என்றும், அதனை முருகப் பெருமான் திருவடிக்கண் நிறுத்தும் கருத்தினராதலால், “மீட்டுன் திருவடிக் காக்கு நாள் உளதோ” என்றும் கூறுகின்றார். புலையேன் - புலைத்தன்மையுடைய யான்.
இதனால் மகளிர் கூட்டத்தில் நாள் அவமாயது கூறி மனத்தினை முருகப் பெருமான் திருவடியில் நிறுத்த அருளுமாறு வேண்டியவாறாம். (1)
|