381.

    மணிக்குழை யடர்த்து மதர்த்தவேற் கண்ணார்
        வஞ்சக மயக்கினில் ஆழ்ந்து
    கணிக்கரும் துயர்கொள் மனத்தினை மீட்டுன்
        கழலடிக் காக்குநாள் உளதோ
    குணிக்கரும் பொருளே குணப்பெருங் குன்றே
        குறிகுணங் கடந்ததோர் நெறியே
    எணிக்கரு மாலு மயனுநின் றேத்தும்
        எந்தையே தணிகையெம் மிறையே.

உரை:

      இத்தன்மைத்தென அளந்தறிய வியலாத பரம்பொருளே, பெருங் குணக்குன்றமே, குறி குண வெல்லைகளைக் கடந்த நெறியின் பயனே, கரிய திருமாலும் அயனும் பரமாகிய நிலையை நினைந்து திருமுன் நின்று ஏத்தித் தொழும் எந்தையாகிய தணிகையரசே, மணிகள் இழைத்த காதணியாகிய குழையோடு பொருது மதர்ப்புற்ற வேல் போலும் கண்களையுடைய மகளிரது வஞ்சம் பொருந்திய காம மயக்கத்தில் மூழ்கி அளவிட முடியாத துன்பமுறும் என் மனத்தை மீட்டுக் கழலணிந்த உன் திருவடிக்கண் நிறுத்தும் நாள் எனக்கு எய்துமோ, அருள்புரிக, எ. று.

     குணித்தல் - அளவிடல், பரம்பொருள் அளத்தற் கரியதாகலின், “குணிக்கரும் பொருளே” என்றும், திண்மையும் சலியாமையும் உடைமை பற்றிக் “குணப்பெருங் குன்றே” என்றும் கூறுகின்றார். குறி - பெயர். உருவும் குணமும் செயலும் தெரிந்தாலன்றிப் பெயர் குறித்தலாகாமையின், “குறி குணம் கடந்தது” என்றும், ஞான நன்னெறியில் நின்று முயல்வார் பெறும் பயனாய் அமைவது பற்றி, “நெறியே” என்றும் இயம்புகிறார். குறி குணங்களின் எல்லைக்கு அப்பாலாய் விளங்குவதையெண்ணி நான்முகனும் நாராயணனும் வழிபடுகின்றார்க ளென்பார், “எணிக்கரு மாலும் அயனும் நின்று ஏத்தும் எந்தையே” என உரைக்கின்றார். எண்ணி யென்பது இடைகுறைந்து எணியென வந்தது.

     இதுவும் மேற் கூறிய கருத்தையே வலியுறுத்தியவாறாம்.

     (2)