382.

    இறைக்குளே யுலக மடங்கலு மருட்டும்
        இலைநெடு வேற்கணார் அளகச்
    சிறைக்குளே வருந்து மனத்தினை மீட்டுன்
        திருவடிக் காக்குநாள் உளதோ
    மறைக்குளே மறைந்தம் மறைக்கரி தாய
        வள்ளலே யுள்ளகப் பொருளே
    அறைக்குளே மடவார்க் கனநடை பயிற்றும்
        அணிதிருத் தணிகைவா ழரைசே.

உரை:

     வேதங்களின் உட்பொருளாய் அவ்வேதத்தாலும் உணர்வரியவனாகிய வள்ளற் பெருமானே, உயிர்களின் உள்ளத்துறையும் பரம் பொருளே, இளமகளிர்க்குத் தத்தம் இல்லின்கண் அன்னம் போன்ற நடை கற்பிக்கும் அழகிய திருத்தணிகைப் பதியில் இருந்தருளும் அருளரசே, சிறிது போதில் உலக மக்கள் அனைவரையும் மயங்குவிக்கும் இலை பொருந்திய நெடிய வேல் போன்ற கண்களை யுடைய மகளிரின் கூந்தல் முடிக்குள் அகப்பட்டு வருந்தும் என் மனத்தினை மீட்டு உனது திருவடிக் கீழ் நிறுத்தும் நாள் எனக்கு எய்துமோ, அறிகிலேன், எ. று.

     இருக்கு முதலிய வேதங்களிலுள்ள மந்திரங்களின் கருப்பொருளாதல் தோன்ற, “மறைக்குளே மறைந்து” என்றும், அவ்வேதங்களைக் கற்றறிந்த வேதியராலும் உணரப்படாமை பற்றி, “மறைக் கரிதாய வள்ளலே” என்றும் எடுத்துரைக்கின்றார். “விளங்கும் மறை ஓதிய ஒண்பொருளாகி நின்றான்” (கோட்டாறு) என ஞானசம்பந்தரும், “மன்னும் மறைகள் தம்மிற் பிணங்கி நின்று இன்னன வென்றறியாதன” (இன்னம்பர்) என நாவுக்கரசரும், “வேதங்கள் ஐயா என ஓங்கி ஆழ்ந்த தகன்ற நுண்ணியனே” (சிவபு) என மணிவாசகரும் உரைப்பன காண்க. உயிர்களது நெஞ்சின் உள்ளத்தால் உணரப்படும் பொருளாதல் விளங்க, “உள்ளகப் பொருளே” என ஓதுகின்றார். இல்லங்களில் தனி வாயிலும் கதவும் கொண்ட பகுதி அறை யெனப்படும். அன்னம் போன்ற நடை இளமகளிர்க்குச் சிறப்பாவது பற்றி, இளமையிலே பயிற்றுவது தெரிவிப்பார் “அறைக்குளே மடவார்க் கனநடை பயிற்றும் அணிதிருத் தணிகை” எனக் கூறுகின்றார். உலகில் தம்மைக் காண்பவர் மனத்தைக் காமவுணர்ச்சியால் கலக்கி மயக்கும் இயல்பினர் என்றற்கு, “இறைக்குளே யுலகம் மருட்டும் இலைநெடு வேற்கணார்” என்று உரைக்கின்றார். அளகச் சிறை- கூந்தலில் இடும் முடிச்சு; கொண்டையுமாம்.

     இதனாலும் மேற்கூறிய கருத்தையே வலியுறுத்தியவாறாம்.

     (3)