385. கிளைக்குறும் பிணிக்கோர் உறையுளாம் மடவார்
கீழுறும் அல்குலென் குழிவீழ்ந்
திளைக்கும்வன் கொடிய மனத்தினை மீட்டுன்
இணையடிக் காக்கும்நாள் உளதோ
விளைக்குமா னந்த வியன்தணி வித்தே
மெய்யடி யவர்உள விருப்பே
திளைக்குமா தவத்தோர்க் கருள்செயுந் தணிகைத்
தெய்வமே அருட்செழுந் தேனே.
உரை: சிவானந்தத்தை விளைவிக்கும் பெரிய ஒப்பற்ற வித்துப் போன்ற முருகப் பெருமானே, மெய்யடியார்களின் மனத்தில் நிறையும் விருப்பமே, திருவருளில் கலந்து மகிழும் பெரிய தவத்தவர்க்கு வேண்டும் இன்னருளை நல்குகின்ற தணிகைப் பதியில் எழுந்தருளும் தெய்வமே, திருவருளாகிய செழுமையான தேன் போன்றவனே, பலவாய்ப்பெருகும் நோய்களுக்கு உறைவிடமாகிய மகளிரின் கீழேயுள்ள அல்குல் எனப்படும் குழியின்கண் வீழ்ந்து மெலிகின்ற வலிய கொடுமையுடைய மனத்தை மீட்டு உனது திருவடிக்கண் உறுவிக்கும் நாள் எனக்கு உளதாகுமா? எ. று.
ஆன்மாக்களுக்கு ஞானானந்தத்தை உண்டாக்குதற்குக் காரணமாகிய சிவஞானத் திருவுருவின னாதலால் முருகப் பெருமானை, “விளைக்கும் ஆனந்த வியன்தனி வித்து” எனவும், மெய்யுணர்வு மிக்க அடியார்களை மெய்யடியார்கள் எனவும், அவர்கள் முருகனிடத்து பெருகிய அன்புருவாய் நின்று விளங்குவதால், “மெய்யடியவர் உள விருப்பே” எனவும், அவர்கள் பெரிய தவம் புரிந்து தவஞான இன்பத்தில் மகிழ்ந்து இருப்பது தோன்றத் “திளைக்கும் மாதவத்தோர்” எனவும், அவர்கட்குச் சிவானந்தம் எய்துதல் வேண்டித் திருவருள் வழங்குவது புலப்பட, “மாதவத்தோர்க்கு அருள் செய்யும் தணிகைத் தெய்வமே” எனவும், சிவமாகிய திருவருளிடத்தில் ஒழுகும் தேன் போலச் சிவஞானத் திருவுருவாய்த் தோன்றி இன்பம் செய்வது மறவாமைப் பொருட்டு, “அருட் செழுந் தேனே” எனவும் இயம்புகின்றார். பெண்களின் தொடர்பால் உண்டாகும் நோய் ஒன்று பலவாய்க் கிளைப்பது பற்றிக் “கிளைக்குறும் பிணிக்கோர் உறையுளாம் மடவார்” என்றும், அவர்களுடைய இடையின் கீழ் உறுப்பாதலால் பெண்மையுறுப்பைக் “கீழுறும் அல்குல் என் குழி” என்றும், குழி வீ.ழ்ந்து இளைக்கும் மென்மை யுடையதாயினும்
கொடுமை புரிவதில் வன்மை மிக்கிருப்பது பற்றிக் “குழி வீழ்ந்திளைக்கும் வன் கொடிய மனம்” என்றும் குறிக்கின்றார்.
இதனாலும் மேற்கூறிய கருத்தை வலியுறுத்தியவாறாம். (6)
|