386.

    தேன்வழி மலர்ப்பூங் குழல்துடி இடைவேல்
        திறல்விழி மாதரார் புணர்ப்பாம்
    கான்வழி நடக்கும் மனத்தினை மீட்டுன்
        கழல்வழி நடத்தும்நாள் உளதோ
    மான்வழி வருமென் அம்மையை வேண்டி
        வன்புனத் தடைந்திட்ட மணியே
    வான்வழி யடைக்கும் சிகரிசூழ் தணிகை
        மாமலை அமர்ந்தருள் மருந்தே.

உரை:

     மான் வயிற்றில் பிறந்த என் தாயாகிய வள்ளிநாயகியாரை விரும்பி வளவிய தினைப்புனத்திற்குச் சென்று சேர்ந்து மணி போல்பவனே, வான வீதியைத் தடுக்கும் உச்சியை யுடைய தணிகை மலையில் எழுந்தருளும் மருந்து போல்பவனே, தேன் சொரியும் மலர் சூடிய அழகிய கூந்தலையும் உடுக்கை போன்ற இடையையும் வேல் போன்ற கண்களையுமுடைய பெண்களின் புணர்ச்சியாகிய காட்டு வழியில் செல்லும் மனத்தை மீட்டு உன் கழலணிந்த திருவடிக்கண் செலுத்தும் நாள் எனக்குண்டாகுமோ? எ. று.

     மான் வயிற்றில் பிறந்தமை பற்றி வள்ளிநாயகியை, “மான்வழி வரும் என் அம்மை” எனவும், அவள் குறிஞ்சிக் குறவரிடையே வளர்ந்து தினைப்புனங் காவல் புரிந்தொழுகிய போது அப்புனத்தின்கண் சென்று கண்டு காதல் நட்புற்ற செய்தியை நினைந்து, “வண்புனத் தடைந்திட்ட மணியே” எனவும் இயம்புகிறார். தணிகை மலையின் உயர்ச்சியை விளக்க, “வான்வழி அடைக்கும் சிகரிசூழ் தணிகை” என்று சிறப்பிப்பதோடு அதன் மேலிருக்கும் முருகன் பிறவி நோய் அறுக்கும் பெருமானாதல் பற்றி, “மாமலை அமர்ந்தருள் மருந்தே” என்று புகழ்ந்து மகிழ்கின்றார். மகளிர் இடைக்குத் துடி (உடுக்கை)யை உவமம் கூறுவது மரபாதலால், “துடியிடை” என்கின்றார். வேற்படை பாயப் பட்டார் உடற்குள் புகுந்து நோய் செய்தல் போலக் கட்பார்வையால் பார்க்கப்பட்டார் நெஞ்சினுள் பாய்ந்து காமநோயை விளைவித்தலால், “வேல் திறல் விழி மாதரார்” என்று கூறுகின்றார்.

     இதனால் மேற்கூறிய கருத்தையே வற்புறுத்தவாறாம்.

     (7)