387. மருந்தென மயக்கும் குதலையங் தீஞ்சொல்
வாணுதல் மங்கையர் இடத்தில்
பொருந்தென வலிக்கும் மனத்தினை மீட்டுன்
பொன்னடிக் காக்கும்நாள் உளதோ
அருந்திடா தருந்த அடியருள் ஓங்கும்
ஆனந்தத் தேறலே அமுதே
இருந்தரு முனிவர் புகழ்செயும் தணிகை
இனிதமர்ந் தருளிய இன்பே.
உரை: வாயா லருந்தாமல் அறிவால் சுவைக்குமாறு அடியவர் உள்ளத்தில் ஊறிப் பெருகும் ஞானானந்தமாகிய தேனே, அமுதமே, அரிய முனிவர்கள் இருந்து புகழும் தணிகையின்கண் இனிமையால் எழுந்தருளும் இன்பப் பொருளே, தேவாமிர்தமோ என மயக்குகின்ற குதலை அமைந்த இனிய சொற்களையும் ஒளி பொருந்திய நெற்றியையுமுடைய மங்கையரிடத்தில் பெறும் இன்பத்திலே இருந்தொழிக என வற்புறுத்தும் என் மனத்தை அதனினின்றும் மீட்டு உன் அழகிய திருவடிக் கண்ணே நிற்கப் பண்ணும் நாள் எனக்கு எய்துமோ? எ. று.
உள்ளத் தூறும் ஞான வின்பமாகிய தேன் அருள் ஞானத்தால் உண்ணப் படுவது பற்றி, “அருந்திடா தருந்த அடியருள் ஓங்கும் ஆனந்தத் தேறலே” என்றும், “அமுதமே” என்றும் போற்றுகின்றார். அருள் முனிவர் - நந்தி முதலாகிய முனிவர்கள், மருந்து - தேவாமிர்தம். குதலை - சொல் முழுதும் விளங்காதவாறு அன்பு மிகுதியால் குறைபடப் பேசுதல். குறைச் சொல்லாயினும் கேட்டற்கு இனிமை படப் பேசுவதால், “குதலையந் தீஞ்சொல்” எனப்படுகிறது. காம வின்ப வயப்பட்ட மனம் அதனையே நீங்காது நின்று பெற வற்புறுத்தல் பற்றி, “மங்கையரிடத்தில் பொருந்தென வலிக்கும் மனம்” என்று கூறுகின்றார்.
இதனாலும் மேற்கூறிய கருத்தே வலியுறுத்தப்படுமாறு காணலாம். (8)
|