388.

    இன்பமற் றுறுகண் விளையிழி நிலமாம்
        ஏந்திழை யவர்புழுக் குழியில்
    துன்பமுற் றுழலும் மனத்தினை மீட்டுன்
        துணையடிக் காக்கும்நாள் உளதோ
    அன்பர்முற் றுணர அருள்செய்யும் தேவே
        அரியயன் பணிபெரி யவனே
    வன்பதை அகற்றி மன்பதைக் கருள்வான்
        மகிழ்ந்துறும் தணிகையின் வாழ்வே.

உரை:

     அன்பராயினார் முழுதுணர்வு பெற அருள் புரியும் தேவனாகிய முருகப் பெருமானே, திருமாலும் பிரமனும் வணங்கிப் பணிபுரியும் பெருமை உடையவனே, அன்புக்கு மறுதலையான செயல்களை நீக்கி மக்களினத்துக்கு அருள் புரியும் பொருட்டு மன மகிழ்ச்சியுடன் தணிகைப் பதியில் எழுந்தருளும் வாழ் முதலே, இன்பமன்றி நோய் பலவும் உண்டாக்கும் இடமாகிய மகளிரது புழு மலிந்த குழியாகிய அல்குல் தடத்தில் வீழ்ந்து துன்பமுற்று உழலும் மனத்தினை மீட்டு உன் இரண்டாகிய திருவடியில் ஒன்றியிருக்கும் நாள் எப்பொழுது எய்துமோ அறியேன், எ. று.

     மலவிருளால் மறைப்புண்டு உணர்வு சுருங்கி யிருத்தலால் சிற்றுணர்வும் சிறு செயலுமுடையதாய மக்கள் உயிர்க்கு அன்பு நெறியால் அறிவு பெருகும் இயல்பு பற்றி, “அன்பர் முற்றுணர அருள் செய்யும் தேவே” என விளம்புகின்றார். காக்கும் கடவுளாகிய திருமாலும், படைக்கும் கடவுளாகிய பிரமனும் பெரிய தேவர்களாயினும் முழுமுதற் பொருளாகிய முருகப் பெருமானை நோக்கச் சிறியவர் என்பது விளங்க, “அரி அயன் பணி பெரியவனே” என விளக்குகின்றார். அன்புக்கு மறுதலை வன்பு. உயிர்கட்கு இன்பம் பயவாத செயல்களைச் செய்விக்கும் வன்பு நீங்கினாலன்றி மக்களினம் இனிது வாழா முடியாதாகையால், இன்ப வாழ்வு அளித்தல் வேண்டி இனிது வாழ்விக்கும் பொருட்டு முருகனாய்ச் சகளிகரித்துத் தணிகையில் எழுந்தருளி யுள்ளான் என்ற உண்மை துலங்க, “வன்பதை அகற்றி மன்பதைக் கருள்வான் மகிழ்ந்துறும் தணிகையின் வாழ்வே” என்று சொல்லுகின்றார். உறுகண் - துன்பம். இழிநிலம் - இழிந்த வயல். இழி நிலமாம் புழுக்குழி - இழிவான நாற்றமுடைய இடமாகிய அல்குற் றடம். ஏந்திழையவர் - உயர்ந்த ஆபரணங்களை அணிந்த மகளிர். இழைகளால் உயர்ந்தாராயினும் அவரது பெண்மை யுறுப்பு இன்பம் தருவதின்றி நோய் மிகவும் உண்டு பண்ணுவதாக இருத்தல் தோன்ற, “இன்பமற் றுறுகண் விளையிழி நிலமாம் ஏந்திழையவர் புழுக்குழி” என இழித்துரைக்கின்றார். அதன்கட் படிந்த மனம் துன்புற்று மீளாது தோய்ந்து நிற்பது பற்றித் “துன்பமுற் றுழலும் மனத்தினை மீட்டுன் துணையடிக் காக்கும் நாள் உளதோ” என்று வேண்டுகிறார். திருவடி ஞானத்தாலல்லது பேரின்ப வாழ்வு பெறலரிது என்பது கருத்து.

     இதனாலும் மேற்கூறிய கருத்தையே வற்புறுத்துமாறு காண்க.

     (9)