389.

    வாழுமிவ் வுலக வாழ்க்கையை மிகவும்
        வலித்திடும் மங்கையர் தம்பால்
    தாழுமென் கொடிய மனத்தினை மீட்டுன்
        தாள்மலர்க் காக்கும்நாள் உளதோ
    சூழும்நெஞ் சிருளைப் போழும்மெய் யொளியே
        தோற்றம் ஈறற்ற சிற்சுகமே
    ஊழுமுற் பவமோ ரேழும்விட் டகல
        உதவுசீ ரருட்பெருங் குன்றே.

உரை:

     நெஞ்சினைச் சூழ்ந்து கொண்டிருக்கும் அறியாமை யிருளைப் பிளந்து ஒளிரும் உண்மை யொளி உருவானவனே, ஆதி யந்தம் இல்லாத ஞானவின்பமே, ஊழ் வினையும் பிறப்பு வகை யேழும் விட்டொழியுமாறு உதவுகின்ற சிறப்புப் பொருந்திய பேரருள் ஞானக் குன்றமே, இவ்வுலகியல் வாழ்க்கையையே மிகவும் வற்புறுத்தும் மகளிரின்பத்தில் தாழ்ந்து வீழ்ந்து கோணலாகிக் கிடக்கும் என் மனத்தை அதனினின்றும் மீட்டு உன் திருவடியாகிய தாமரைக்கு உரியதாக்கும் நாள் என்று எய்துமோ? எ. று.

     நெஞ்சின் உள்ளிருக்கும் உயிரைச் சூழ்ந்து கிடக்கும் அஞ்ஞானவிருள் நெஞ்சையும் சூழ்ந்து கொள்ளுவதால், “சூழும் நெஞ்சிருள்” எனவும், உலகிற் பரவும் புறவிருளைப் போக்கும் சூரியன் போல நெஞ்சின் அகவிருளை ஞான சூரியனாய் நீக்கி யருளுவது பற்றிப் “போழும் மெய் ஒளியே” எனவும் உரைக்கின்றார். சூரிய ஒளி போலாமல் இடையறவின்றி ஒளிர்ந்த வண்ணமிருப்பது பற்றி ஞானவொளியை, “மெய்யொளி” என்றும் விளக்குகிறார். “ஓவற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி” (முருகு) என்று நக்கீரர் கூறுவது காண்க. ஞானத்தால் உளதாகும் இன்பநிலை சிற்சுகம் எனப்படும். இருளால் மறைக்கப்பட்ட வழித் தோன்றாமலும் இருள் நீங்கிய வழித் தோன்றியும் உள்ள நிலைப் பொருளாதலின், “தோற்றம் ஈறற்ற சிற்சுகமே” என்று கூறுகிறார். ஊழ் - ஊழ்வினை; அஃதாவது செய்தாரைப் பயன் நுகர்விக்க முதிர்ந்து நிற்கும் வினை. உற்பவம் - பிறப்பு. உயிரைப் பிணித்து நிற்கும் வினை காரணமாகப் பிறப்பு ஏழும் உண்டாவதால் இரண்டையும் சேரக் கூறுகின்றார். வினைப் பயனை நுகர்விக்கும் பெருமானாதலால், “வினையும் பவமும் விட்டகல உதவுசீர் அருட் பெருங் குன்றே” என்கின்றார். திருவருள் ஞானத்தைத் தந்து உதவுகிறார் என்பதற்கு, “அருட் பெருங்குன்றே” என்று சிறப்பிக்கின்றார். மகளிரொடு கூடி இன்புற்றுறையும் மக்களுக்கு உலக வாழ்க்கையின் நிலையாமையும், துன்ப மிகுதியும் நினைவில் எழுவதில்லையாதலால், “வாழும் இவ்வுலக வாழ்க்கையை மிகவும் வலித்திடும் மங்கையர் தம்பால் தாழும் என் கொடிய மனம்” என்று சொல்லுகிறார். நிலையாமையை நிலையுடையதாகவும் துன்பத்தை இன்பமாகவும் நினைப்பதால், “கொடிய மனம்” என்று கூறுகின்றார்.

     இதனாலும் மேற்கூறிய கருத்து வற்புறுத்தியவாறாம்.

     (10)