39.

    ஒளியுள் ளொளியே சரணம் சரணம்
        ஒன்றே பலவே சரணம் சரணம்
    தெளியும் தெருளே சரணம் சரணம்
        சிவமே தவமே சரணம் சரணம்
    அளியும் கனியே சரணம் சரணம்
        அமுதே அறிவே சரணம் சரணம்
    களியொன் றருள்வோய் சரணம் சரணம்
        கந்தா சரணம் சரணம் சரணம்.

உரை:

     ஒளிக்கு ஒளி நல்கும் காரணப் பொருளே, ஒன்றாயும் பலவாயும் தோன்றும் பரம்பொருளே, தெளிவுடையார்க்கும் தெளி வளிக்கும் தெளிபொருளே, சிவமே, சிவப் பேற்றுக்குரிய தவமே, முற்றப் பழுத்த கனியே, அமிர்தமே, அறிவே, இன்பமே பொருந்த அருள்பவனே, கந்தசாமிக் கடவுளே உன் திருவடியே எனக்குப் புகலாகும். எ. று.

     ஞாயிறு முதலிய ஒளிப் பொருள்கள் பலவாயினும் அவற்றிற்கெல்லாம் மூல காரணமான ஒளிப் பொருள் என்றற்கு முருகனை, “ஒளியுள் ஒளியே” என்று கூறுகிறார். “பரஞ்சுடர்ச் சோதியுட் சோதியாய் நின்ற சோதியே” (சித்தத்தொகை) எனச் சான்றோர் உரைப்பது காண்க. பரமாந் தன்மையில் ஒன்றாயினும் பொருள் தோறும் கலந்து நிற்றலால் “ஒன்றே பலவே” என மொழிகின்றார். “ஒருவனுமே பலவாகி நின்றது ஒருவண்ணமே” (இராமேச்சுரம்) எனத் திருஞானசம்பந்தர் தெரிவிப்பது காண்க. வாழ்க்கைக் கலக்கத்தில் உண்மை காண முயல்வார்க்குச் சிந்தையுள் தெளிவு நல்கும் திறம் பற்றி, “தெளியும் தெருளே” எனச் செப்புகின்றார். தெருள்-விளக்கம். தெருள் அளிப்பது முருகக் கடவுட்கு அருளியல்பாகும். “தெரிபுரி சிந்தையார்க்குத் தெளிவலால் அருளுமில்லை” (ஐயாறு) எனப் பெரியோர் அறிவுறுத்துவது காண்க. சிவத்தின் வேறல்லனாதல் தோன்ற முருகனைச் “சிவமே” என்றும், தவத்தால் உயிர்கள் சிவமாந்தன்மை எய்துவது பற்றித் “தவமே” என்றும் இயம்புகிறார். “உருவம் வேறன்றி யைந்துமுகன் அறுமுகன் என்றோதும், திருவுரு விரண்டன் மாட்டும் சிவமெனும் யாமே மன்றப், பொருவில் ஆருயிராய் நிற்பேம்” (வீராட்) என்று தணிகைப்புராணம் கூறுவது காண்க. நன்கு பழுத்துத் தேன் கசியும் அளிந்த கனி போல அருள் கசிந்தொழுக விளங்குவது தோன்ற “அளியும் கனியே” எனவும், ஒழுகும் அருளின் நலத்தை “அமுதே” எனவும், அதனால் விளையும் மெய்யறிவை “அறிவே” எனவும் உரைக்கின்றார். மெய்யறிவாய் நின்றளிக்கும் மகிழ்ச்சி பற்றிக் “களியொன்றருள்வோய்” எனப் புகழ்கின்றார்.

     இதனால் ஒளியுள் ஒளியாய் ஒன்றாய்ப் பலவாய் நிற்றல் முதலிய முருகன் நலம் கூறி அவன் திருவடி யல்லது புகலில்லை என்று வற்புறுத்தவாறாம்.

     (39)