36. அன்பிற் பேதுறல்
அஃதாவது அன்பு மிகுதியால் அறிவு நிலை குலைந்து திருவருளைப் பலப்பல நினைந்து வெய்துற் றுரைப்பது. இதன்கண் திருவடி நீழலிற் பெறலாகும் இன்பத்தை நினைந்தும், மெய்ம்மை யுணர்வு பெறும் காலத்தை நினைந்தும், பிழைகளை நினைந்தும், திருவடியல்லது துணை காணாமை நினைந்தும் பேதுற்ற வள்ளற் பிரான் பலப்பல உரைப்பது காணலாம். இப்பத்தின்கண் “தணிகைக் குன்றமர்ந்திடு குணக்குன்றே” என்பது பாட்டின் ஈற்றடி தோறும் மகுடமாய் நிற்கிறது.
எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் 390. மூடர்கள் தமக்குள் முற்படுங் கொடிய
முறியனேன் தனக்குநின் அடியாம்
ஏடவிழ் கமலத் திருநற வருந்த
என்றுகொல் அருள்புரிந் திடுவாய்
ஆடர வணிந்தே அம்பலத் தாடும்
ஐயருக் கொருதவப் பேறே
கோடணி தருக்கள் குலவும்நற் றணிகைக்
குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
உரை: படமெடுத் தாடுகின்ற பாம்பினை மாலையாக அணிந்து அம்பலத்தில் ஆடுகின்ற தலைவராகிய சிவபிரானுக்கு ஒப்பற்ற தவப்பயனாகிய பெருமானே, கிளைகளும் கொம்புகளும் கொண்டு பசுந்தழைகளால் அழகுறும் மரங்கள் நிறைந்த நல்ல தணிகை மலையில் அமர்ந்திருக்கின்ற சிற்குணக் குன்றமாகிய முருகப் பெருமானே, மூடர்களின் முற்பட்டு நிற்கும் கொடிய முழு மூடனாகிய எனக்கு உனது திருவடியாகிய இதழ் விரிந்த தாமரை மலரின்கண் சுரக்கின்ற தேனே உண்ணுதற்கு எப்பொழுது அருள் செய்வாயோ? எ.று.
அம்பலத்தாடும் சிவபெருமான் பாம்பை உடம்பில் பூணாரமாக அணிந்து கொள்வது பற்றி, “ஆடர வணிந்தே அம்பலத் தாடும் ஐயர்” என்று கூறுகின்றார். “அன்பர் என்பூடு உருகக் குணிக்கும் பாம்பாலங்காரப் பரன்” என்பது திருக்கோவையார். பெற்ற பெருமை விளங்க, “ஒரு தவப்பேறே” என்கிறார். மரங்கள் கிளைகளாலும், தழை நிறைந்த கொம்புகளாலும் அழகு பெறுதலால், “கோடணி தருக்கள்” என்று சிறப்பிக்கின்றார். குணங்களால் நிறைந்த மேன்மை விளங்கக் “குணக்குன்றே” என்று குறிக்கின்றார். மூடர்களில் தலையாய முழு மூடன் என்பதற்கு, “மூடர்கள் தமக்குள் முற்படுங் கொடிய முறியனேன்” என்று தம்மையே வெறுத் துரைக்கின்றார். முறியன் - அடிமை; ஈண்டு முறித்து விலக்கத்தக்கவன் என்னும் பொருளது. திருவடியை, “ஏடவிழ் கமலம்” என்பதால் திருவடி நீழ.லிற் பெறலாகும் இன்பத்தைத் “திருநறவு” என்றும், அவ்வின்ப நுகர்ச்சியை “அருந்த” என்றும் சிறப்பிக்கின்றார்.
இதனால் திருவடி நீழலை இன்பப் பேற்றினைப் பெறுதற்கு அருள் புரிக என்று வேண்டிக் கொண்டவாறாம். (1)
|