391.

    கற்றவர் புகழ்நின் திருவடி மலரைக்
        கடையனேன் முடிமிசை அமர்த்தி
    உற்றவிவ் வுலக மயக்கற மெய்ம்மை
        உணர்த்தும்நாள் எந்தநாள் அறியேன்
    நற்றவர் உணரும் பரசிவத் தெழுந்த
        நல்லருட் சோதியே நவைதீர்
    கொற்றவேல் உகந்த குமரனே தணிகைக்
        குன்றமர்ந் திடுகுணக் குன்றே.

உரை:

     நல்ல தவம் புரிந்தோர் உணர்ந்து மகிழும் பரசிவத்தின்கண் தோன்றிய நல்லருள் வழங்கும் ஒளிப் பொருளாகிய முருகப் பெருமானே, குற்றமில்லாத வெற்றியே கொண்ட வேற்படையை விரும்பி ஏந்தும் குமரக் கடவுளே, தணிகை மலையில் எழுந்தருளும் குணக் குன்றமே, நன்னூல்களைக் கற்ற பெரியோர் புகழ்கின்ற நினது திருவடியாகிய தாமரைப் பூவை யாவர்க்கும் கடையனாகிய யான் தலைமேல் இருத்திப் பிறந்துள்ள இவ்வுலகு உறுவிக்கும் மயக்கம் கெட யான் மெய்யுணர்வு பெறும் நாள் என்றோ, அறிகிலேன், எ. று.

     நற்றவர், சிவஞானத்தால் சிவபரம் பொருளை உணர்பவர். அவர்களது உணர்வின்கண் காட்சி வழங்கும் பரசிவத்தை, “நற்றவர் உணரும் பரசிவம்” என்கின்றார். இவர்களை “ஞானிகளாய் உள்ளார்கள் நான் மறையை முழுதுணர்ந்து ஐம்புலன்கள் செற்று, மோனிகளாய் முனிச் செல்வர் தனித்திருந்து தவம் புரிபவர்” (முது) என ஞானசம்பந்தர் கூறுவர். சிவபரம் பொருளிலிருந்து சோதிப் பிழம்பாய்த் தோன்றியது பற்றிப் “பரசிவத் தெழுந்த சோதியே” என்றும், அருள் ஞானவொளி திகழ்வதனால், “நல்லருட் சோதியே” என்றும் நவில்கின்றார். நல்லற நெறியில் பகைவரைக் கொன்று வெற்றி சிறந்த வேல் என்றற்கு, “நவைதீர் கொற்ற வேல்” என உரைக்கின்றார். நன்னூல் கற்றதன் பயன் இறைவன் நற்றாளைப் புகழ்வதாதலின், “கற்றவர் புகழ்நின் திருவடி மலர்” என்று சிறப்பிக்கின்றார். “கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்” (குறள்) என்று பெரியோர் கூறுவது காண்க. கடையன் - குணஞ் செயல்களால் கீழ்ப்பட்டவன். பிறக்கும் உயிர்கள் வாழ்தற்கு இடமாவது இவ்வுலக மாவதால், “உற்ற இவ்வுலகம்” எனவும், தன்கண் வாழ்வாரைத் தன்பாற் பெறலாகும் இன்பத்தால் மயங்கி அறிவு தெளிவுறாதபடி செய்தலால் இம்மயக்கற்று மெய்ம்மை உணர்வு எய்தினாலன்றி வாழ்வாங்கு வாழ்பவரும் உய்தி பெறாராதலால், “மெய்ம்மை உணர்த்தும் நாள் எந்தநாள்” எனவும் விளம்புகின்றார்.

     இதனால் உலக மயக்கற மெய்யுணர்வு எய்தும் நாள் என்றோ? என முறையிட்ட வாறாம்.

     (2)