392.

    ஞாலவாழ் வெனும்புன் மலமிசைந் துழலும்
        நாயினும் கடையவிந் நாய்க்குன்
    சீலவாழ் வளிக்கும் திருவடிக் கமலத்
        தேன்தரு நாளுமொன் றுண்டோ
    ஆலவாய் உகந்த வொருசிவ தருவில்
        அருள்பழுத் தளிந்தசெங் கனியே
    கோலவா னவர்கள் புகழ்திருத் தணிகைக்
        குன்றமர்ந் திடுகுணக் குன்றே.

உரை:

     மதுரை ஆலவாயில் உயர்ந்தோங்கிய ஒப்பற்ற சிவமாகிய மரத்தில் அருட்சாறு நிறையப் பழுத்து மென்மை யுற்றிருக்கும் சிவந்த கனியே, அழகிய தேவர்கள் புகழ்கின்ற திருத்தணிகை மலையில் எழுந்தருளும் குணக் குன்றமே, உலக வாழ்வென்னும் புல்லிய மலத்தை யுண்டு திரியும் நாயினும் கீழ்ப்பட்ட நாயாகிய எனக்கு உனது நல்லொழுக்க அருள் வாழ்வளிக்கும் உனது திருவடிக் கமலத்தில் சுரக்கின்ற ஞானமாகிய தேனை அளிக்கும் நாள் என்று வருமோ? எ. று.

     ஆலவாய் - மதுரையில் உள்ள சொக்கநாதன் திருக்கோயில். உகப்பு - உயர்வு. சிவபெருமானைத் தரு (மரம்) என்று உருவகம் செய்தலால் அவரிடத்தில் தோன்றிய சிவந்த திருமேனியை யுடைய முருகப் பெருமானை, “ஒருசிவ தருவில் அருள் பழுத்து அளிந்த செங்கனியே” என்று பரவுகின்றார். கனி பழுத்தலாவது, கனியின் உள்ளே இனிய சாறு பெருகுதல். கனிதலாவது, கையால் சிறிது தேவர்கள் அழகிய உருவுடையவர்கள் என்பது பற்றிக் “கோலவானவர்கள்” என்று குறிக்கின்றார். நாய்கள் மலம் உண்ணும் இயல்பினவாதலால் உலக வாழ்வைப் புல்லிய மலமாக்கி அதன்கண் உலக வின்பத்தை நுகர்ந்து வாழும் தம்மைப் “புன் மலம் மிசைந்து உழலும் கடைய இந்நாய்” என்று குறித்துரைக்கின்றார். பொதுவாக உண்ணுதற்கு விரும்பாத மலத்தை உண்ணக்கூடியது அந்நாய்களுள்ளும் கடையான நாய். அக்கடைய நாய் உண்ணும் மலம் மிகவும் புல்லியதாகலின் அதனை விதந்து, “ஞால வாழ்வெனும் புன்மலம்” என்று இகழ்ந்துரைக்கின்றார். அதனால் தம்மையும் கடையநாய் எனப்பழிகின்றார். சீலம் - சிவஞான ஒழுக்கம். இதனைச் சரியை கிரியா யோகம் என்பர். இந்தச் சீலவாழ்வு திருவடிப் பேற்றுக்குரிய திருவருள் ஞானத்தைப்பெறுவித்தலால், “சீல வாழ்வளிக்கும் திருவடிக் கமலத்தேன்” என்றும், அது தமக்கு எய்தும் நாள் எப்போது என ஏங்கித் “தேன்தரு நாளும் ஒன்றுண்டோ” என்றும் இயம்புகிறார். நாளும் ஒன்று உள்ளதனால் எந்த நாளும் திருவடி ஞானம் நல்குதற்கு ஏற்றது என்பது கருத்து.

     இதனால் சீல வாழ்வும் திருவடி ஞானமும் எய்தும் நாளை அருளுக என வேண்டிக் கொண்டவாறாம்.

     (3)