393. பவமெனுங் கடற்குள் வீழ்ந்துழன் றேங்கும்
பாவியேன் தன்முகம் பார்த்திங்
கெவையும்நா டாமல் என்னடி நிழற்கீழ்
இருந்திடென் றுரைப்பதெந் நாளோ
சிவமெனும் தருமக் கடலகத் தெழுந்த
தெள்ளிய அமுதமே தேனே
குவிமுலை வல்லிக் கொடியொடுந் தணிகைக்
குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
உரை: சிவம் எனப்படுகின்ற அறக்கடலின் உள்ளத்தில் எழுந்து போந்த தெளிந்த அமிர்தமாகிய முருகப் பெருமானே, தேனே, குவிந்த கொங்கைகளை யுடைய வல்லிக் கொடி போன்ற வள்ளிநாயகியோடு எழுந்தருளும் குணக் குன்றமே, பிறவி எனப்படும் கடலில் வீழ்ந்து அலைந்து வருந்தும் பாவியாகிய என் முகத்தைப் பார்த்து என்பால் உள்ள குற்றங்கள் எவற்றையும் காணாமல் என் அடி நிழற் கீழ் இருத்திடு என்று நீ திருவாய் மலர்ந்தருள்வது என்றோ, அறிகிலேன், எ. று.
சிவபெருமானை அறக்கடல் என்று உருவகம் செய்வதால் அவனுடைய நுதல் விழி வழியாக வெளிப்பட்ட முருகனை, “அகத்தெழுந்த தெள்ளிய அமுதம்” என்று உரைக்கின்றார். சிந்திக்கும் சிந்தைக்கண் தேனூறி நிற்றலால், “தேனே” என்கின்றார். வல்லிக் கொடி போல் விளங்குதல் தோன்ற வள்ளியம்மையை “வல்லிக் கொடி” என்றும், இளமை நலம் புலப்படக் “குவி முலை” என்றும் கூறுகின்றார். காரண காரியத் தொடர்ச்சியால் கரையின்றி இருப்பது பற்றிப் பிறவியைப் “பவமெனும் கடல்”என்கிறார். சான்றோரும், “பிறவிப் பெருங்கடல் நீந்துவர்” (குறள்) என்று கூறுவர். கரையேற மாட்டாமல் ஏங்குவது பற்றி, “ஏங்கும் பாவியேன்” என்றும், முகத்தைப் பார்க்கின் எனது குற்ற மிகுதி தோன்றி உனது அருள் நிறைந்த நெஞ்சினை மாற்றிவிடும் என்பாராய்ப் “பாவியேன் தன்முகம் பார்த்து” என்றும், அங்கே “எவையும் நாடாமல்” என்றும் இயம்புகின்றார். “என் அடி நிழற் கீழ் இருந்திடு” என்றுரைப்பது திருவடிப் பேறு குறித்து நின்றது. திருவடி நீழலைச் சார்ந்த விடத்துப் பிறவியும் அதற்கேதுவாகிய வினையும் இல்லையாம் என்பது கருத்து.
இதனால் திருவடிப் பேறு எய்துவது எந்நாள் என வேண்டிக் கொண்டவாறாம். (4)
|