396.

    அழிதரும் உலக வாழ்வினை மெய்யென்
        றலைந்திடும் பாவியேன் இயற்றும்
    பழிதரும் பிழையை யெண்ணுறே லின்று
        பாதுகாத் தளிப்பதுன் பரமே
    மொழிதரும் முக்கட் செங்கரும் பீன்ற
        முத்தமே முத்தியின் முதலே
    கொழிதரும் அருவி பொழிதருந் தணிகைக்
        குன்றமர்ந் திடுகுணக் குன்றே.

உரை:

     காண்பவரால் புகழ்ந்து ஓதப்படும் மூன்று கண்களையுடைய செங்கரும்பாகிய சிவபிரான் பெற்ற முத்துப் போல்பவனே, உயிர்கட்கு முத்தி யின்பம் நல்கிய முதல்வனே, கொழித்து விழும் அருவிகள் நீர்பொழியும் தணிகைக் குன்றின்கண் எழுந்தருளும் குணக் குன்றமே நிலையின்றிக் கெடும் உலகியல் வாழ்க்கையை நிலையென்று எண்ணி ஓயாது அலையும் பாவியாகிய யான் செய்கின்ற பழி விளைக்கும். என் குற்றங்களைத் திருஉள்ளத்தில் கொள்ளாமல் இப்பொழுது என்னை ஆதரித்து அருள் புரிவது உன்னுடைய பொறுப்பாகும், எ. று.

     சிவனது பரமாந் தன்மையையும் சிவமூர்த்தமாய் விளங்கும் திறத்தையும் ஞானவான்களாகிய சான்றோர் உணர்ந்து இடையற வின்றி ஓதுவதால், “மொழி தரும் முக்கட் செங்கரும்பு” என்று கூறுகின்றார். நிறத்தாலும் சுவையாலும் செங்கரும்பு போலுதலால் சிவனை, “முக்கட் செங்கரும்பு” என்று சிறப்பிக்கின்றார். கண், கணுவுமாம். சிவனைக்கரும் பென்றமையால் அவன்பால் தோன்றிய முருகனை, “முக்கட் செங்கரும் பீன்ற முத்தமே” என்று செப்புகிறார். கரும்பிடத்தே முத்துப் பிறக்கும் என்பது உலகுரை. முத்தி நிலைக்கு முதல்வனாதல் பற்றி, “முத்தியின் முதலே” என்கின்றார். “முத்தி முழுமுதல் உத்திரகோசமங்கை வள்ளல்” (பூவல்லி) என்று மணிவாசகர் மொழிவது காண்க. கல்லும் மணியும் வரம்பின்றி வரும் அருவிகளைக் “கொழி தரும் அருவி” என்றும், நீர்ப் பெருக்கம் பற்றி “அருவி பொழி தரும்” என்றும் அறிவிக்கின்றார். உலக வாழ்வின் நிலையாமையைப் புலப்படுத்தற்கு, “அழி தரும் உலக வாழ்வு” என்றும், வாழ்பவர் பலரும் அந்நிலையாமையை யுணராது நிலை யுடையதென மயங்கி அலைவது கொண்டு, “மெய்யென் றலைந்திடும் பாவியேன்” என்றும் உரைக்கின்றார். “ஒன்றலா உயிர் வாழ்க்கையை நினைந்திட்டு உடல் தளர்ந்து அருமாநிதி இயற்றி என்றும் வாழலாம் எமக்கெனப் பேசும் இதுவும் பொய்யெனவே நினை உளமே” (தினை நகர்) என்று சுந்தரமூர்த்திகள் சொல்லுவது காண்க. இம்மயக்கத்தால் செய்யப்படும் குறைகள் மிகப் பலவாதலால் அவற்றைக் கருதி உன் திருவுள்ளம் இரங்குதற்குத் தடைப்படும் என்று அஞ்சுகிறேன் என்பார், “பழிதரும் பிழையை எண்ணுறேல்” எனவும், இனியும் பொய்யுலக வாழ்வில் பழி பாவங்களைச் செய்து துன்புறாவண்ணம் ஆதரித்து அருள் வழங்குதல் வேண்டும் எனவும் முறையிடுவாராய்ப் “பாதுகாத் தளிப்பதுன் பரமே” எனவும் முறையிடுகின்றார். பரம் - பாரம்; பொறுப்பு.

     இதனால் மயக்க வுணர்வை மாற்றி அருள் ஆதரவு செய்து அருள் வாழ்வு நல்க வேண்டுமென வேண்டியவாறாம்.

     (7)