397.

    நின்னிலை அறியா வஞ்சகர் இடத்தில்
        நின்றுநின் றலைதரு மெளியேன்
    தன்னிலை அறிந்தும் ஐயகோ வின்னுந்
        தயையிலா திருந்தனை என்னே
    பொன்னிலைப் பொதுவில் நடஞ்செயும் பவளப்
        பொருப்பினுள் மலர்ந்திடும் பூவே
    கொன்னிலை வேகைக் கொளுந்திருத் தணிகைக்
        குன்றமர்ந் திடுகுணக் குன்றே.

உரை:

     பொன்னால் நிலைபெற வேயப்பட்ட அம்பலத்தில் நடம் புரியும் சிவனாகிய பவள மலையில் மலர்கின்ற பூப்போன்ற முருகப் பெருமானே, பகைவரைக் கொல்லும் தொழிலைக் கொண்ட வேற்படையைக் கையிலேந்தும் திருத்தணிகை மலையில் எழுந்தருளிய குணக் குன்றமே, நினது அருணிலையை யறியாமல் வஞ்ச நெஞ்சமுடையவர்பாற் சென்று பன்னாள் நின்றும் அலைந்தும் வருந்தும் எளியனாகிய எனது நிலைமையை நன்கறிந்தும் ஐயோ, இன்னமும் அருள் புரியா திருக்கின்றாய்; இஃது என்னையோ? எ. று.

     பொன்னோடு வேய்ந்த சபையாதலால், தில்லையம்பலத்தைப் “பொன்னிலைப் பொது” எனவும், அதன்கண் திருக்கூத் தியற்றுவது பற்றி, “நடம் செயும்” எனவும், செந்நிற மேனியனாகிய சிவன்பால் பூப்பொறி போல் வெளிப்பட்டமை பற்றி முருகனைப் “பவளப் பொருப்பினுள் மலர்ந்திடும் பூ” எனவும் உரைத்து மகிழ்கின்றார். வேற்படை கொலை குறித்ததாகலின், “கொன்னிலை பெற்ற வேல்” என்கின்றார். கொன் நிலை பெற்ற வேல் எனினுமையும்; பகைவர்க்கு அச்சம் உண்டாக்குவ தென்னும் பொருளதாம். வஞ்சகர்பாற் சென்று பன்னாள் வருந்தினமைக்குக் காரணம் முருகனது அருணலத்தை யறியா தொழிந்தமை யென்பார், “நின்னிலை யறியாது வஞ்சகரிடத்தில் நின்றுநின்று அலைதரும் எளியேன்” என்றும், எனது அறியாமை கண்டும் இன்னமும் இரக்கமின்றி யிருக்கின்றா யென்பார், “எளியேன் தன்னிலை யறிந்தும் ஐயகோ இன்னும் தயையிலா திருந்தனை” என்றும், இது வியப்புத் தருகிற தென்றற்கு, “என்னே” என்றும் இயம்புகின்றார். அறியாது என்னும் வினையெச்சம் ஈறு குறைந்தது. வன்புறை தோன்ற, “இருந்தனை” என இறந்த காலம் வந்தது.

     இதனால், எனது அறியாமை கண்டும் இரங்காமலிருப்பது வியப்பாக இருக்கிறதென விண்ணப்பித்தவாறாம்.

     (8)