398. பாடிநின் திருச்சீர் புகழ்ந்திடாக் கொடிய
பதகர்பால் நாடொறும் சென்றே
வாழநின் றேங்கும் ஏழையேன் நெஞ்ச
வாட்டமிங் கறிந்திலை என்னே
ஆடிநீ றாடி அருள்செயும் பரமன்
அகம்மகி ழரும்பெறல் மருந்தே
கோடிலங் குயர்வான் அணிதிருத் தணிகைக்
குன்றமர்ந் திடுகுணக் குன்றே.
உரை: மேனி யெங்கும் திருநீறணிந்து அம்பலத்தில் திருக்கூத்தாடி உயிர்கட்கு அருள் புரியும் பரமசிவனுடைய மனத்தை மகிழ்விக்கும் பெறுதற்கரிய மருந்து போன்ற முருகப் பெருமானே, உச்சி வானளாவ உயர்ந்து விளங்கும் திருத்தணிகை மலையில் எழுந்தருளும் குணக் குன்றமே, நின்னுடைய சிறப்புக்களை வாயாரப்பாடிப் பன்னாள் சென்று மனம் வாடி இவ்வுலகிலிருந்து ஏங்குகின்ற ஏழையாகிய என் நெஞ்சில் வருத்தத்தை நீ இன்னும் அறியாதிருப்பது என்னே! எ. று.
மெய்யெலாம் வெண்ணீறணிந்து உலகுயிர்கள் உய்யும் பொருட்டு அம்பலத்தில் ஆடுகின்ற குறிப்புத் தோன்ற, “ஆடி நீறாடி அருள் செயும் பரமன்” என்றும், அவர் மனம் மகிழுமாறு ஞானத் திருவுருவாய் விளங்குதல் பற்றி, “அரும் பெறல் மருந்தே” என்றும் போற்றுகின்றார். உயர்ந்த வானத்தைத் தொடுவது போல உயர்ந்திருப்பது தோன்றக் “கோடிலங் குயர்வான் திருத்தணிகை” என்று கூறுகின்றார். அன்புடைய அடியார்களோடு கூடாமல் முருகன் திருவருளை நினைந்து வாயாற் புகழாமல் உள்ள தீய மனத்தவரைப் “பாடி நின் திருச்சீர் புகழ்ந்திடாக் கொடிய பதகர்” என்று பழிக்கின்றார். பாதகர், பதகர் என வந்தது. அவர்களைச் சேர்ந்திருந்து வருந்திய குற்றம் புலப்பட, “நாள் தொறும் சென்று வாடிநின் றேங்கும் ஏழையேன்” என்று தம்மையே குறை கூறுகின்றார், வள்ளலார்.
இதனால் தமது தவறெடுத்துரைத்துத் திருவருளை வேண்டியவாறாம். (9)
|