399.

    வன்பொடு செருக்கும் வஞ்சர்பால் அலையா
        வண்ணமின் றருள்செயா யென்னில்
    துன்பொடு மெலிவேன் நின்திரு மலர்த்தாள்
        துணையன்றித் துணையொன்றும் காணேன்
    அன்பொடும் பரமன் உமைகையில் கொடுக்க
        அகமகிழ்ந் தணைக்கு மாரமுதே
    கொன்பெறும் இலைவேல் கரத்தொடும் தணிகைக்
        குன்றமர்ந் திடுகுணக் குன்றே.

உரை:

     பரமசிவன் அன்புடன் உமாதேவி கையில் கொடுக்க அவள் அகமகிழ்ந்து வாங்கி மார்பிலணைத்துக் கொள்ளும் நிறைந்த அமுதுபோன்ற பெருமானே, பெருமை பெற்ற இலை பொருந்திய வேற்படையைக் கையில் ஏந்தும் தணிகை மலையில் எழுந்தருளும் குணக் குன்றமே, அன்பின்றிச் செருக்கித் திரியும் வஞ்சகரோடு கூடி அலையாதவாறு எனக்கின்று அருள் செய்யாயாயின் நின்னுடைய மலர் போன்ற திருவடி துணையாவ தல்லது வேறு ஒன்றும் துணையாமாறு காண்கிலேனாதலால் துன்பத்தால் மெலிந்து கெடுவேன், எ. று.

     சரவணப் பொய்கையில் தவழ்ந்து கொண்டிருந்த முருகனாகிய குழந்தையைப் பரமசிவன் கண்டு அன்பு கொண்டு உமாதேவி கையில் கொடுக்க அவள் அக்குழந்தையை மனம் நிறைந்த மகிழ்ச்சியோடு வாங்கித் தன் மார்பிலணைத்து அன்பு பெருகிய வரலாற்றை நினைப்பிப்பாராய், “அன்பொடும் பரமன் உமை கையில் கொடுக்க அகமகிழ்ந் தணைக்கும் ஆரமுதே” என்று பாராட்டுகின்றார். கொன் - பெருமை. “அச்சம் பயமிலி காலம் பெருமையென்று அப்பால் நான்கே கொன்னைச் சொல்லே” (இடை) என்பது தொல்காப்பியம். வன்பு, அன்புக்கு மறுதலையாய இரக்கமின்மை, வன்பும், செருக்கும், ஈயாமையும் உடைய செல்வர்களை, “வஞ்சர்” என்கின்றார். அவர்பால் அடைந்து பன்முறையும் அலைப்புண்டமை விளங்க, “வஞ்சர் பால் அலையா வண்ணம்” என்றும், இப்பொழுதே எனக்கு அருள் புரிக என்றும், அருளாவிடில் தமக்கெய்தும் துன்ப நிலையை, “அருள் செயா யென்னில் துன்பொடு மெலிவேன்” என்றும் தமக்கு முருகனது திருவடி யல்லது துணை வேறில்லை என்பதை வற்புறுத்தற்கு, “நின்திரு மலர்த்தாள் துணையன்றித் துணையொன்றும் காணேன்” என்றும் முறையிட்டுக் கொள்ளுகின்றார்.

     இதனால் வஞ்சகரிடம் சென்று அலைப்புண்டு வருந்தியது தெரிவித்தவாறாம்.

     (10)