4. வள்ளலுனை யுள்ளபடி வாழ்த்துகின்றோர் தமை
மதித்திடுவ தன்றி மற்றை
வானவரை மதியென்னி னானவரை யொருகனவின்
மாட்டினும் மறந்து மதியேன்
கள்ளமறு முள்ளமுறு நின் பதமலால் வேறு
கடவுளர் பதத்தை யவர்என்
கண்ணெதிர் அடுத்தைய நண்ணென வளிப்பினும்
கடுவென வெறுத்து நிற்பேன்
எள்ளளவு மிம்மொழியி லேசுமொழி யன்றுண்மை
என்னை யாண்டருள் புரிகுவாய்
என் தந்தையே யெனது தாயே யென் இன்பமே
என்றனறிவே யென்னன்பே
தள்ளரிய சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.
உரை: விலக்கற்கரிய சென்னையிலுள்ள கந்த கோட்டத்துள் விளங்கும் கோயிலிலுள்ள கந்த வேளாகிய பெருமானே, தண்ணிய தோற்றத்தை யுடைய தூய மணிகளில் இன்முகம் கொண்ட சைவமணியாய்ச் சிறக்கும் சண்முகம் படைத்த தெய்வமணி யாயவனே, எனக்குத் தந்தையும் தாயுமாய், எனக்கு இன்பமும் அறிவும் அன்புமாயிருப்பவனே, வள்ளலாகிய உன்னை உண்மையாக வாழ்த்தி வழிபடுபவர்களை நன்கு மதிப்பதன்றி வானவர்களை அவ்வாறு மதித் தொழுகுக என்று சொன்னால் நான் அவர்களைக் கனவிலும் ஒருமுறை யேனும் மறந்தும் மதிக்க மாட்டேன்; கள்ளமில்லாதார் உள்ளத்தில் சென்று பொருந்தும் நின்னுடைய திருவடியை யன்றி, வேறு தெய்வங்களின் பாதத்தை அவர்கள் என்கண் காண நின்று வழிபடு என அருளிச்செய்யினும் விடமெனக் கருதி வெறுத்து விலகி விடுவேன். இவ்வாறு கூறும் என் சொற்கள் எள்ளத்தனையும் அவர்களை இகழும் குறிப்புடையன அல்ல; உள்ளத்தெழும் உண்மை மொழி யாதலால் என்னை ஆட்கொண்டு அருள் புரிதல் வேண்டும். எ. று.
உலகியற் பொரு ளின்பங்கட்குரிய சொல்லும் செயலும் மிக்கு நிலவும் சூழ்நிலையால் பத்தி நெறிக்கேற்ற தன்றென விலக்கப்படுவதன் றென்றற்குச் சென்னையைத் “தள்ளரிய சென்னை” என்று குறிக்கின்றார். வள்ளலின் வள்ளன்மையை யறிந்து வாழ்த்துவோர் நன்றி மறவாத நல்ல அறவோராதலின் அவரை நன்கு மதித்துப் போற்றுவது கடனாவது பற்றி, “வள்ளலுனை யுள்ளபடி வாழ்த்துகின்றோர் தமை மதித்திடுவதன்றி” என்றும், மற்றையோர் மதிக்கத்தக்க நலமில ராதலால் அவர்கள் தேவனேயாயினும் புறக்கணிக்கத் தக்கவ ரென்றற்கு “மற்றை வானவரை மதி யென்னில் நான் அவரை ஒரு கனவின் மாட்டினும் மறந்தும் மதியேன்” என்றும் உரைக்கின்றார். மக்களில் நல்வினை செய்து வானுலகிற் றோன்றினவராதலின் வானவரை மதியென்று பிறர் கூறினும் சண்முகப் பெருமானாகிய உன்னை வாழ்த்தி வழிபடுவோர் எனப் படாமையால் கனவிலும் மறந்தும் நினைவிற் கொள்ள மாட்டேன் என வற்புறுத்தற்கு “ஒருகனவின் மாட்டினும் மறந்தும் மதியேன்” என்கின்றார். அகத்தே நினையாமற் புறத்தே பிறர் காண வாழ்த்துவது கொள்ளப்படா தென்றற்கு “உள்ளபடி வாழ்த்துகின்றோர்” என வற்புறுத்துகின்றார். முருகப் பெருமான் திருவடி கள்ளமில்லாத உள்ளத்தின் கண் தானே சென்று அருள் புரியும் நலமுடையதாகலின் “கள்ளமறும் உள்ளமுறும் நின்பதம்” என்று சிறப்பிக்கின்றார் “சேவடி படரும் செம்மல் உள்ளம்” (முருகு) என நக்கீரர் முதலாயினார் கூறுவது இக்கருத்தை ஆதரிப்பது காண்க. வேறு கடவுளர் பதங்கள் அன்ன வல்லவாதலின், அவர் தாமே போந்து கண்ணெதிரே நின்று பதத்தைக்காட்டி, இவற்றை நண்ணுக என்று சொன்னாலும் ஏற்க மாட்டேன் என்பார், “வேறு கடவுளர் பதத்தை அவர் என் கண்ணெதிர் அடுத்து ஐய நண் என அளிப்பினும் கடுவென வெறுத்து நிற்பேன்” எனக் கட்டுரைக்கின்றார். கடு, விடம். இவ்வாறு பிற கடவுளரைப் புறக்கணிப்பது சமரசக் கொள்கைக்கு மாறாகாமை புலப்படுத்தற்கு “எள்ளளவும் இம் மொழியில் ஏசும் மொழியன்று” எனவும், இதனை யாப்புறுத்தல் வேண்டி “உண்மை” எனவும் இயம்புகின்றார். உடல் நலம் நோக்கி, “என் தந்தையே எனது தாயே” என்றும், மனநலம் வேண்டி, “என் இன்பமே” என்றும், ஞானநலம் பேணி, “என்றன் அறிவே” என்றும், தொடர்பு நயந்து, “என் அன்பே” என்றும் இசைக்கின்றார்.
இதனால், சண்முகப் பெருமானை உள்ளபடி வாழ்த்தி வழிபடுவோர்பால் தாம் கொண்ட நன்மதிப்பை எடுத்தோதி அருள் பெற வேண்டுமாறு காணலாம். (4)
|