40. மன்னே யெனையாள் வரதா சரணம்
மதியே யடியேன் வாழ்வே சரணம்
பொன்னே புனிதா சரணம் சரணம்
புகழ்வார் இதயம் புகுவாய் சரணம்
அன்னே வடிவே லரசே சரணம்
அறுமா முகனே சரணம் சரணம்
கன்னேர் புயனே சரணம் சரணம்
கந்தா சரணம் சரணம் சரணம்.
உரை: மன்னவனே, எனை ஆண்டருளும் வரதனே, இயற்கை யறிவு வடிவினனே, அடியேனது வாழ்வாயவனே, பொன் போன்றவனே, தூயனே, புகழ்ந்து ஏத்தும் அன்பர் மனத்தில் புகுந்திருப்பவனே, அன்னை போல்பவனே, கூரிய வேலேந்தும் வேந்தனே, ஆறுமுகப் பெருமானே, மலை போன்ற தோளை யுடையவனே, கந்தசாமிக் கடவுளே, உன் திருவடி எனக்குப் புகலாம். எ. று.
மன் - மன்னன்; என்று முள்ள பொருள் என்றுமாம். வரதன் - வரம் நல்குபவன். மதி - இயற்கை யறிவு. இயல்பாக வுள்ள ஆன்ம வறிவை விளங்கச் செய்வது தோன்ற, “மதியே” எனக் கூறுகின்றார். உடம்பு தந்து உலகில் திருவடி நினைந்து வாழ்வித்தவனாதலின், “அடியேன் வாழ்வே” என்று பரவுகின்றார். “தொழுப்படி யோங்கள் மண்ணகத்தே வந்து வாழச் செய்தானே” (திருப்பள்ளி) எனத் திருவாசகம் கூறுவது அறிக. நிறத்தாலும் பொலிவாலும் போகம் நுகர்வித்தலாலும் பொன் போறலால் “பொன்னே” என்றும், பொருள் அனைத்திலும் கலந்து ஒன்றாய் நிற்பினும், கலப்பால் தூய்மை கெடாது தன்னுடைய அடியடைந்தாரையும் தூயராக்குதலால் “புனிதா” என்றும் புகழ்கின்றார். நினைப்பவர் மனத்தைக் கோயிலாகக் கொள்வது பற்றி, “புகழ்வார் இதயம் புகுவாய்” எனக்கூறுகிறார். அன்னை, அன்னே என விளியேற்றது. கல் - மலை.
இதனால் மன்னனும் வரதனும் பிறவுமாகிய முருகப் பெருமான் திருவடிப்புகலிடம் என வற்புறுத்தியவாறாம். (40)
|