401.

    விதுவாழ் சடையார் விடைமேல் வருவார்
        விதிமா லறியா விமலனார்
    மதுவாழ் குழலாள் புடைவாழ் வுடையார்
        மகனார் குகனார் மயிலூர்வார்
    முதுவாழ் வடையா தவமே யலைவேன்
        முன்வந் திடயான் அறியாதே
    புதுவாழ் வுடையா ரெனவே மதிபோய்
        நின்றே னந்தோ பொல்லேனே.

உரை:

     திங்கள் தங்கிய சடையை யுடையவரும், எருதின் மேல் எழுந்தருளுபவரும், பிரமனும் திருமாலும் காண முடியாத விமலரும், தேன் பொருந்திய கூந்தலையுடைய உமாதேவியை ஒருபாகத்தே யுடையவருமாகிய சிவபிரான் மகனும், குகனும் மயிலேறு பவனுமாகிய முருகப் பெருமான் பெறலாகும் பழமையான திருவருள் இன்ப வாழ்வு எய்தாமல் வீணே உலகியலில் வருந்துகின்ற என் முன்னே வந்து தோன்றவும் அறிந்து கொள்ளாமல் புதுச் செல்வம் பெற்றவன் செருக்கினால் அறிவிழந்து கெடுவது போல் என் பொல்லாத் தன்மையால் சோர்ந்து போனேன், எ. று.

     விது - சந்திரன். விடை - எருது. விதி - பிரமதேவன். படைக்கப்படும் உயிர்ப் பொருட்கும் உயிரில் பொருட்கும் வாழ்வும் வாழ்நாளும் விதிப்பவன் என்பதனால் பிரமன் விதி யெனப்படுகின்றான். விமலனார் - மலக்கலப் பில்லாத தூயவனான சிவன். மது - தேன். கூந்தலில் அணிவன புது மலராதலால், அவற்றினின்று துளிக்கும் தேன் படிந்த கூந்தலை, “மதுவாழ் குழல்” எனச் சிறப்பிக்கின்றார். பழமைக்கும் பழைமையும் முதுமைக் கெல்லாம் முதுமையு முடைய முருகனது, திருவருள் வாழ்வின் தொன்மை புலப்பட, “முதுவாழ்வு” என மொழிகின்றார். அதனைப் பெற முயலாது வீணே உலகியற் பொய் வாழ்வை நச்சியுழன்றமை பற்றி, “அவமே யலைந்தேன்” எனவும், தன் முன்னர்த் தோன்றிய போதும் பொல்லாங் குடைமையால் உணரா தொழிந்தேன் என்றற்கு, “முன் வந்திட யான் அறியாதே மதிபோய் நின்றேன்” எனவும் மொழிகின்றாள். திடீரென வந்த செல்வ வாழ்வு அறிவை மறைத்தலால் சிறுமதி யுடையவர் யாவரையும் இகழ்ந்து போக்குவது உலகியற் பண்பு. அதனால் அவர்கள் செயலை உவமம் கூறுகின்றாள். இதனால் முருகனை நேரில் எய்தப் பெற்றும் திருவருட் கூட்டம் பெறாமை நினைந்து இரங்கியவாறாம்.

     (2)