402. காயோ டுடனாய்க் கனல்கை யேந்திக்
காடே யிடமாக் கணங்கொண்ட
பேயோ டாடிப் பலிதேர் தருமோர்
பித்தப் பெருமான் திருமகனார்
தாயோ டுறழும் தணிகா சலனார்
தகைசேர் மயிலார் தனிவேலார்
வேயோ டுறழ்தோட் பாவையர் முன்னென்
வெள்வளை கொண்டார் வினவாமே.
உரை: காய்ந்த தலையோட்டை ஒரு கையிலும் நெருப்பை ஒரு கையிலும் ஏந்திக் கொண்டும் சுடுகாட்டை ஆடுமிடமாகக் கொண்டும் கூட்டமான பேய்களைச் சூழக் கொண்டும் இரவில் ஆடுவதும் பகற் போதில் மனைதோறும் சென்று பலியேற்பதும் செய்யும் பித்தப் பெருமானாகிய சிவபெருமானுக்கு மகனாரும், தாயினும் மிக்க அன்புடைய தணிகை மலையை யுடையவரும், அழகுடைய மயிலை ஊர்தியாகக் கொண்டவரும், ஒப்பற்ற வேற்படையை ஏந்துபவரும், மூங்கிலினும் சிறந்த அழகிய தோளையுடைய வள்ளி தெய்வயானை என்ற மகளிர் இருவரைப் பக்கத்தே யுடையவருமான முருகப் பெருமான் என்னைக் கேளாமலே முன்னதாக எனது சங்கு வளையைக் கொண்டேகினார்; நான் செய்வதறியாது மயங்குகின்றேன், எ. று.
காயோடு - காய்ந்துலர்ந்த மண்டை யோடு. “வற்றலோடு கலனாப் பலிதேர்ந்து எனதுள்ளம் கவர்கள்வன்” (பிரமபுரம்) என்று கூறுவர். கணம் - கூட்டம். கூட்டங் கூட்டமாய் இருப்பவை யென்பது பற்றிக் “கணங்கொண்ட பேய்” என்று கூறுகிறார். பலி தேர்தல் - உண் பொருள் வேண்டிப் பெறுதல், பூப்பலி நீர்ப்பலி யெனப் பலவாயினும், இங்கே பொதுப்பட மொழிதலால், உண்பலி யெனக் கொள்க. பித்தர் பெருமான் - பித்தராகிய பெருமான்; பித்தரல்ல ராயினும், பித்தரைப் போலும் செயலினராதலால், சிவனைப் பித்தன் என்று பேசுகின்றார்கள். “பித்தரே யொத்தோர் நச்சிலராகில் இவரலா தில்லையோ பிரானார்” (பாச்சிலாச்) என்றும், “பித்தரை யொத்தொரு பெற்றியர்” (வேள்விக்) என்றும் நம்பியாரூரர் கூறுவது காண்க. தாயோடு உறழ்தல் - தாயினும் மிக்க அன்புடையராதல். தகை - அழகு. வேயோ டுறழ்தோள் என்ற விடத்து உறழ்ச்சி ஒப்பாகாது உயர்வு குறித்தது, வெள்வளை எனவே சங்கு வளை என்பதாயிற்று. வளை கொண்டார் என்பது உடலிற் றோன்றிய மெலிவால் கைவளை கழன்று வீழ்ந்தமை யறியாது வளையைக் கவர்ந்து கொண்டுவிட்டார் என்பதாம். இஃது உடம்பு நனி சுருங்குகல் என்னும் மெய்ப்பாடென்பர் தொல்காப்பியர்.
இதனால் முருகப் பெருமான் என் முன் வந்து உள்ளங் கவர்ந்து உடல் மெலிவு எய்துவித்தான் என உரைத்தவாறாம். (3)
|